நிதி குற்றங்கள்: போலிசுக்கு தகவல் அளித்த மூன்று உள்ளூர் வங்கிகள், இரு சூதாட்டக்கூடங்களுக்கு பாராட்டு

நிதி குற்றங்கள்: போலிசுக்கு தகவல் அளித்த மூன்று உள்ளூர் வங்கிகள், இரு சூதாட்டக்கூடங்களுக்கு பாராட்டு

1 mins read
98506fa1-9731-40be-890d-34f3d7bacd49
-

கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக்குவது, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை ஒடுக்க மூன்று உள்ளூர் வங்கிகளும் இரு சூதாட்டக்கூடங்களும் எடுத்த முயற்சிகளுக்காக போலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.

பண மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட நிதி குற்றங்கள் தொடர்பாக போலிசுக்கு அவை அளித்த தகவல்களின் விளைவாக $25 மில்லியனுக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பில் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 32,660 புகார்களில் பாதியளவு வங்கித்துறையால் அளிக்கப்பட்டவை.

அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு புகார்களை டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி வங்கிகள் அளித்தன.

கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த புகார்களில் ஏறத்தாழ 20 விழுக்காட்டை ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா, மரினா பே சேண்ட்ஸ் ஆகியவற்றில் இயங்கும் இரு சூதாட்டக்கூடங்கள் அளித்தன.

மேற்கூறப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர இந்த புகார்கள் உதவின.

இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆறு வாரங்கள் முதல் ஒன்பது ஆண்டு, ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட வரி, தண்டத் தொகை, அபராதம் ஆகியவற்றின் மதிப்பு $2 மில்லியனுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது.

"சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை அதிகாரிகளிடம் தெரியப்படுத்திய வங்கிகளுக்கும் சூதாட்டக்கூடங்களுக்கும் எங்களது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என்றார் வர்த்தக விவகாரப் பிரிவு இயக்குநர் டேவிட் சியூ.