மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்ட பலன்கள்

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்ட பலன்கள்

2 mins read
c8df7b91-8d48-4ebd-9c55-c063696446cc
-

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் மூலம் அத்தலைமுறையினர் பெற்றுள்ள மூன்று அனுகூலங்களை அதிபர் ஹலிமா யாக்கோப் பொதுமக்களிடம் விளக்கினார்.

பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய $100 பேஷன் சில்வர் அட்டை நிரப்புதல், $200 மெடிசேவ் நிரப்புதல், மெடிஷீல்ட் லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் வருடாந்திர சந்தாவில் 5 விழுக்காடு கழிவு ஆகிய பலன்களை அதிபர் ஹலிமா சுட்டிக்காட்டினார்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் தொடர்பான விவரங்களை மூத்தோருக்கு எடுத்துக்கூற விஸ்மா கேலாங் சிராயில் சாலைக்காட்சி நேற்று நடத்தப்பட்டது.

சாலைக்காட்சிக்கு தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

அதிபர் ஹலிமா யாக்கோப், சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, தற்காப்பு மற்றும் வெளிறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோர் சாலைக் காட்சிக்கு வருகை புரிந்து, திட்டம் குறித்து பேசியதுடன் சாலைக்காட்சியில் இடம்பெற்ற அங்கங்களையும் பார்வையிட்டனர்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்களைப் பற்றி மூத்தோருக்குத் தெரிவிக்கும் முயற்சி நாடெங்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய நிகழ்வு அமைந்தது.

இத்திட்டம் தரும் அனுகூலங்கள் பற்றி மலாய் சமூகத்தினருக்குத் தெரிவிக்க நேற்றைய சாலைக்காட்சி நடத்தப்பட்டது.

சமூக சுய உதவி, தொண்டூழியம் ஆகியவற்றை ஊக்குவிப்பதும் நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.

"சவால்மிக்க தருணங்களைக் கடந்து வந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. குடும்பத்தினர் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் பலர் தியாகங்களைச் செய்தனர். இதனால் எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் இருந்தன. அதன் விளைவாக எங்களது சுகாதாரப் பராமரிப்புக்காக போதுமான பணத்தை சேமிக்க முடியாமல் போனது," என்று மெர்டோக்கா தலைமுறையினரான அதிபர் ஹலிமா தெரிவித்தார்.

மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து சாலைக்காட்சிகள், சமூக நிகழ்ச்சிகள் வழி கிட்டத்தட்ட 130,000 மெர்டேக்கா தலைமுறையினரையும் அவர்களது குடும்பத்தினரையும் சென்றடைந்துள்ளதாக அமைச்சு அமைச்சு கூறியது.