இலவச சட்ட சேவை: விருது பெறும் வழக்கறிஞர்கள்

இலவச சட்ட சேவை: விருது பெறும் வழக்கறிஞர்கள்

2 mins read
e8cb8db5-3bbb-4364-983c-cd1aac8cf1ec
-

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு வருபவர் திரு சிங்கரத்னம், வயது 80.

இவர் வழக்காடிய, போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற முடியாமல் மரண தண்டனையை எதிர்நோக்கிய கட்சிக்காரர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைவு.

ஆனால், கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இவர் உதவி செய்த அனைத்துக் கட்சிக்காரர்களும் மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளது பலருக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்திருக்கலாம்.

இதில் இன்னுமொரு சிறப்பு, இவர் பல காலமாக பல வழக்குகளை இலவசமாகவே கட்சிக்காரர்களுக்காக வாதாடியுள்ளது.

தற்பொழுது இவரையும் ேசர்த்து மொத்தம் ஏழு வழக்கறிஞர்களுக்கு, அவர்களின் இலவச சட்ட சேவையை அங்கீகரித்து, தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

மரண தண்டனை குற்றங்களுக்கான சட்ட உதவித் திட்டத்தின் கீழ் இந்த எழுவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

திரு சிங்கரத்னம் 1993ல் போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் தியோ டியோ லெங் என்பவருக்கு விடுதலை வாங்கித் தந்ததன் மூலம் சட்டத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

அதுவரை போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் விடுதலை பெறுவது என்பது குதிரைக் கொம்பான ஒன்று.

இதேபோல், கிட்டத்தட்ட வெற்றி பெறவே முடியாது என்ற மற்றொரு வழக்கில் இயோ ெபங் சாய் என்ற முன்னாள் போலிஸ்காரர் ஒருவர் 24 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

அரசு தரப்பு சாட்சியின் சாட்சியத்தில் குளறுபடிகள் இருப்பதைக் காரணம் காட்டி அவருக்கு அந்த 24 குற்றச்சாட்டுகளிலிருந்தும் இவர் விடுதலை வாங்கித் தந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

இவரைப் போல் விருது பெற்ற மற்றொரு வழக்கறிஞர் தரு என் கே ராஜா என்பவர்.

1991ஆம் ஆண்டு இலவசமாக வழக்காடிய கொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் விராத் கேவ்ர்னன் என்ற தாய்லாந்து நாட்டுக்காரருக்கு இவர் விடுதலை பெற்றுத் தந்தார்.

முதலில் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட திரு ராஜாவின் கட்சிக்காரர் அரசு தரப்பு மேல்முைறயீட்டைத் தொடர்ந்து மறுவிசாரணையை எதிர்நோக்கும் சூழல் உருவானது.

அந்த மறுவிசாரணை வழக்கில் தமது கட்சிக்காரரான விராத் கேவ்ர்னனுக்கு விடுதலை ெபற்றுத் தந்துள்ளார் திரு ராஜா.

இவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய மேல்முறையீட்டு நீதிபதி திரு சின்னதுரை, இவரது கட்சிக்கார் நிரபராதி என்பதில் தமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை எனக் கூறினார்.