குமாரி மோகனபிரபா 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் பெருமைக்குரியவராகிறார்.
ஸூக்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ் சிங்கப்பூர்' போட்டியின் இறுதிச்சுற்றில் பட்டத்தைத் தட்டிச்சென்றார் மோகனபிரபா.
'த நியூ பேப்பர் நியூ ஃபேஸ் 2017' போட்டியில் இறுதிச்சுற்று போட்டியாளராகத் தேர்வுபெற்ற மோகனபிரபா, இவ்வாண்டின் வெற்றியைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்பார்.
பிஎஸ்பி அகாடெமியில் உயிர்மருத்துவ அறிவியல் துறையில் பயிலும் 24 வயது மோகனபிரபா, இந்தப் போட்டியில் வென்றது இன்ப அதிர்ச்சி என்று குறிப்பிட்டதுடன், தனது முயற்சிகளுக்குப் பலன் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.
கேள்வி - பதில் அங்கத்தில் தமது பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப தயாராவதற்கு அதிகமான முயற்சி மேற்கொண்டதே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றார் மோகனபிரபா.
அதன் ஓர் அங்கமாக, தினமும் செய்தித்தாள் வாசித்து அதன் கருத்துகளை உள்வாங்கியதுடன் செய்திகளின் மீதான தனது கருத்துகளை வெளிப்படுத்தும் திறனையும் வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார் அவர்.
இறுதிச்சுற்றில், "உங்களுடைய மாபெரும் அச்சம் என்ன?" என்ற கேள்விக்கு, "அன்புக்குரியவர்களை இழப்பதுதான்," என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுங்கள் என்று கூறிய அவர், நினைவுகள்தான் எப்போதும் நிலைத்திருக்கும் என்றார்.
19 வயது குமாரி லரன்யா குமார் இரண்டாமிடத்தையும், 25 வயது குமாரி செரைல் யாவ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
மேலும், 19 வயது குமாரி அன்னிகா சூ சேகர், 'குளோபல் ஏசியன் மாடல் சிங்கப்பூர்' பட்டத்தை வென்றார்.

