காரில் என்டியு மாணவி மானபங்கம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு

காரில் என்டியு மாணவி மானபங்கம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு

2 mins read
0c269c45-c637-4357-87fc-70bb14bb8a69
-

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவியைத் தனது காரில் அழைத்துச் சென்று மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஓட்டுநர், டெலிகிராம் குழுவின் வழியாக அந்த மாணவியைக் காரில் அழைத்துச் செல்ல முற்பட்டார். யாருமில்லாத கார் நிறுத்தத்திற்கு அவர் அந்தப் பெண்ணை அழைத்துச்சென்று மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மானபங்க புகார் ஒன்றின் பேரில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22ஆம் தேதி) உறுதி செய்தனர். இதன் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

டெலிகிராமிலுள்ள 'ரைட் காக்கீஸ்' என்ற செயலியின் வழி பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் ஒருவரையொருவர் அந்தக் குழுவில் தொடர்புகொண்டனர். கிட்டத்தட்ட 23,000 மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள என்டியுவுக்குச் சேவையாற்றும் இந்தக் குழுவில் சுமார் 4,000 சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண், தனக்கு நேர்ந்ததைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவை 'என்டியு கொன்ஃபெஷன்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிட்டார். சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் என்டியுவைச் சேர்ந்தவர் அல்ல எனக் கூறப்படுகிறது.

'ரைட் காக்கீஸ்' குழு திங்கட்கிழமை இரவு அகற்றப்பட்டது.

சம்பவம் குறித்து அந்த மாணவி இன்னும் பல்கலைக்கழகத்திடம் புகார் செய்யவில்லை என்று என்டியுவின் உதவி இணை நிர்வாகி (மாணவர் வாழ்க்கை) பேராசிரியர் விக்டர் இயோ, த நியூ பேப்பர் நாளிதழிடம் தெரிவித்தார்.

"இது குறித்து பல்கலைக்கழகம் மிகுந்த அக்கறையாக உள்ளது. தனது பள்ளி அல்லது மாணவர் விவகார அலுவலகத்தைத் தொடர்புகொள்ள பல்கலைக்கழகம் அந்த மாணவியை ஊக்குவிக்கிறது," என்றார் பேராசிரியர் இயோ.