சிங்கப்பூரும் பெரும்பாலான மற்ற ஆசிய நாடுகளும் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் எவ்வளவு பொருளியல் வளர்ச்சி அடையும் என்பது பற்றி ஏப்ரல் மாதம் செய்திருந்த முன்னுரைப்புகளை அனைத்துலக பணநிதியம் குறைத்திருக்கிறது.
புதன்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்ட வட்டாரப் பொருளியல் கண்ணோட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூர் இவ்வாண்டு 0.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என நிதியம் கணிக்கிறது. இது, ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்ட 2.3 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு.
சிங்கப்பூர் அரசாங்கம் இவ்வாண்டு 0 முதல் 1 விழுக்காடு வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. சென்ற ஆண்டு சிங்கப்பூர் 3.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. 2020ஆம் ஆண்டில், சிங்கப்பூர் 1 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்பது நிதியத்தின் கணிப்பு. ஏப்ரல் மாதத்தின் 2.4 விழுக்காடு கணிப்பைவிட இது குறைவு.
சீனாவின் வளர்ச்சி இவ்வாண்டு 6.1 விழுக்காட்டுக்கும், அடுத்த ஆண்டு 5.8 விழுக்காட்டுக்கும் குறையும் என்று நிதியம் முன்னுரைக்கிறது. இவ்விரு கணிப்புகளுமே 2018ஆம் ஆண்டில் கிட்டிய 6.6 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு. இந்தியா சென்ற ஆண்டின் 6.8 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து சரிந்து இவ்வாண்டு 6.1 விழுக்காடு வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு 3 விழுக்காடு வளர்ச்சி அடைந்த ஹாங்காங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 0.3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாக ஏப்ரலில் 2.7 விழுக்காடு வளர்ச்சி கணிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, ஆசிய நாடுகள் இவ்வாண்டு 5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என நிதியம் கணிக்கிறது. சென்ற 2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி நிலைக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான வளர்ச்சி. ஆயினும், உலகிலேயே ஆக வேகமாக வளர்ச்சியடையும் வட்டாரமாக ஆசியா தொடர்ந்து நீடிக்கும்.
ஆசிய நாடுகள் "உலகளாவிய கொள்கை நிச்சயமின்மையை நீண்டகாலத்திற்கு எதிர்நோக்கக்கூடும்," என நிதியம் கூறியது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் மோசமடைவது ஒரு முக்கிய இடராக எழக்கூடும் என நிதியம் குறிப்பிட்டது.

