நாற்பது முதல் 49 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்கள் முன்பைவிட இப்போது நன்கு கல்வியறிவு பெற்று, கூடுதல் ஊதியம் பெற முடிவதுடன் நீண்டகாலம் உயிர் வாழ்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு குடும்ப ஆதரவு குறைந்துள்ளது. குறைவானோர் திருமணம் புரிவதால், குடும்பங்களும் சிறிதாகிவிட்டன. நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட ஆய்வு ஒன்று இதனைத் தெரிவிக்கிறது.
காலபோக்கில் வீட்டுரிமை அதிகரித்தாலும், 50 வயதுகளில் மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்களுடன் ஒப்புநோக்க, 40 வயதுகளில் உள்ளோருக்கு இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
1940 முதல் 1979ஆம் ஆண்டு வரை பிறந்த நான்கு தலைமுறை சிங்கப்பூர் குடிமக்களின் சமுதாய, பொருளியல் நிலவரத்தை இந்த ஆய்வு ஆராய்கிறது.
1970களில் பிறந்தவர்களில் 44 விழுக்காட்டினர் பட்டக்கல்வி பெற்றிருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஒப்புநோக்க, 1960களில் பிறந்தவர்களில் 21 விழுக்காட்டினரும் 1940களில் பிறந்தவர்களில் 7 விழுக்காட்டினரும் பட்டக்கல்வி பெற்றுள்ளனர்.
இப்போது 60 வயதுகளில் உள்ளவர்கள் 40 வயதுகளில் இருந்தபோது அவர்கள் பெற்ற இடைநிலை மாத வருமானத்துடன் ஒப்புநோக்க, இப்போது 40களில் இருப்பவர்களின் வருமானம் இரு மடங்கு அதிகம். அத்துடன், இப்போது 60 வயது களில் உள்ளவர்கள் 40 வயதுகளில் இருந்தபோது அவர்களது மத்திய சேம நிதி சாதாரண மற்றும் சிறப்பு கணக்குகளில் வைத்திருந்த தொகையைவிட, இப்போது 40 வயதுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் உள்ள தொகை மூன்று மடங்கு அதிகம்.
பணிக்காலத்தில் தாங்கள் இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இருபது வயதுகளிலும் 30 வயது
களிலும் உள்ள சிங்கப்பூரர்களின் பொருளியல் நிலவரம் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்று நிதி அமைச்சு கூறியது.
நாற்பது வயதுகளில் உள்ள சிங்கப்பூரர்களில் 79 விழுக்காட்டினர் உயர்நிலைக்கல்விக்கு பிந்தைய கல்வியைப் பெற்றுள்ளனர். ஒப்புநோக்க, 50 வயதுகளில் உள்ளவர்களில் 49 விழுக்காட்டினரும் 70 வயதுகளில் உள்ளவர்களில் 22 விழுக்காட்டினருமே உயர்நிலைக்கல்விக்கு பிந்தைய கல்வியைப் பெற்றுள்ளனர்.
பெண்களின் பங்கேற்பு விகிதம் ஊழியரணியில் அதிகரித்துள்ளது. 2009க்கும் கடந்த ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஊழியரணி பங்கேற்பு விகிதம் 5 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்த அதே வேளையில், பெண்களின் பங்கேற்பு விகிதம் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக கூடியது. நாற்பது வயதுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் கூடுதல் ஊதியம் பெறுகின்றனர். ஊழியரின் மத்திய சேம நிதிக் கணக்கிற்கு முதலாளிகள் அளிக்கும் பங்களிப்பையும் சேர்த்து முழுநேர ஊழியர்களின் இடைநிலை மாத ஊதியம் $5,900ஆக உள்ளது. முந்தைய தலைமுறையினர் நாற்பது வயதுகளில் இருந்தபோது அவர்களின் ஊதியத்தைவிட இது ஏறத்தாழ இரு மடங்கு அதிகம்.
சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமாகவும் நீண்டகாலமும் வாழ்கின்றனர். நாற்பது வயதுகளில் உள்ளவர்கள் மேலும் 41 ஆண்டுகள் வாழக்
கூடும். எனினும், திருமணம் புரியும் எண்ணிக்கை குறைந்துள்ளதால் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய ஆதரவு குறையலாம்.

