'அமெரிக்காவும் சீனாவும் இணக்கம் காணவேண்டும்'

'அமெரிக்காவும் சீனாவும் இணக்கம் காணவேண்டும்'

1 mins read

அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையில் பொதுவான நிலையைக் காணவில்லை என்றால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிளவு அதிகரிக்கும்.

இதனால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இந்தப் பெரும் நாடுகளுக்கு இடையில் நடுநிலையுடன் இருந்து வருவது சிரமமாகும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறும் போட்டாபோட்டியை சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் மிகவும் கவலையுடன் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளோடும் வலுவான தோழமை உறவை சிங்கப்பூர் நிலைநாட்டி வரும் என்று குறிப்பிட்ட அவர், அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் நடுநிலையைத் தொடர்ந்து எடுத்து வருவது எல்லா நாடுகளுக்குமே சிரமமாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் ஸியாங்ஷான் கருத்தரங்கு என்ற பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டுக் குழுக் கூட்டத்தில் டாக்டர் இங் உரையாற்றினார்.

அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து செயல்பட்டு முன்னேற்றத்தையும் நிலைப்பாட்டையும் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட டாக்டர் இங், இது உலகிற்குத் தேவை என்று கூறினார்.

பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற பொதுவான பாதுகாப்புச் சவால்களை இரு நாடுகளும் சேர்ந்து செயல்பட்டு சமாளிக்கவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

டாக்டர் இங் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருந்தார்.