ஜூரோங் வெஸ்ட்டில் அதிநவீன உற்பத்தித் துறைக்கான புதிய மையம் அமைகிறது. அதில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகவும் பிரபலமான ஆறு நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.
அந்த நிறுவனங்களில் உலகஅளவில் தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் உள்ளடங்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார்.
ஜெர்மன் நாட்டின் சீமன்ஸ், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான ஃபுளோசர்வ், ஜெர்மனியின் பொறியியல் நிறுவனமான போஷ் ரெக்ஸ்ரோத், சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐஎஸ்டிஎன் நிறுவனம், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (A*Star) சிங்கப்பூர் தயாரிப்புத் தொழில்நுட்பக் கழகம், தேசிய வானிலை ஆய்வு நிலையம் ஆகியவை அந்த ஆறு நிறுவனங்கள்.
ஜூரோங் வெஸ்ட்டில் அமையவிருக்கும் அதிநவீன உற்பத்தித் துறைக்கான புதிய மையம், 'ஜூரோங் புத்தாக்க வட்டாரம்' என்று குறிப்பிடப்படும். 600 ஹெக்டர் பரப்பளவில் அமையும் ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் முதல் கட்டம் 2022ல் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு 95,000க்கும் அதிக புதிய வேலைகள் உருவாகும்.
உற்பத்தித் தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளையும் ஒரே வளாகத்தில் செயல்பட வைத்து அதன்மூலம் நிறுவனங்கள் ஒத்துஉழைத்து புத்தாக்கத்தில் எப்படி எப்படியெல்லாம் செயல்பட முடியும் என்பதற்கு அந்தப் புதிய வட்டாரம் எடுத்துக்காட்டு.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் வருடாந்திர ஆசியப் பசிபிக் தொழில்துறை உருமாற்ற வர்த்தக் காட்சியில் பேசிய துணைப் பிரதமர், தொழில்நுட்பப் புத்தாக்கங்களுக்கு உகந்த சூழ்நிலை இருக்கவேண்டியது மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.
வட்டார உற்பத்தித் துறை மையமாக தென்கிழக்கு ஆசியா மேம்படுவதற்கு வாய்ப்புகள் உள்ள சூழலை அவர் சுட்டிக்காட்டினார்.
இயந்திர மனிதன், முப்பரிமாண அச்சீடுகள் போன்ற புதிய புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நிறுவனங்கள் பலன் அடையும் என்றாலும் உலக வர்த்தகம் சரியில்லாத நிலையில் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

