வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் தங்களது வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் பற்றியும் வாழ்க்கைத்தொழிலில் எவ்வாறு முன்னேற்றமடையலாம் என்பது பற்றியும் இனி தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்.
இந்த அதிகாரிகளுக்கான திறன்சார்ந்த பணிச்சட்டத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கி வைத்தார். மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் மாநாட்டில் பணிச்சட்டம் வெளியிடப்பட்டது.
இந்தப் பணிச்சட்டம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை பற்றியும், தொழில்துறையில் இருப்பர்களுக்கான முன்னேற்றப் பாதைகள், உத்தேச பொறுப்புகள் பற்றியும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. தற்போது நடப்பிலுள்ள, எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய திறன்களையும், திறன் மேம்பாட்டுக்கான பயிற்சித் திட்டங்களையும் பட்டியலையும் பணிச்சட்டம் உள்ளடக்குகிறது.
"இந்தப் பணிச்சட்டத்துடன், நீங்கள் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்திற்கு நன்கு திட்டமிட்டு, விவரமறிந்து தீர்மானங்கள் எடுக்கமுடியும்," என்றார் திருமதி டியோ.
திறன் அடிப்படையிலான ஆள்சேர்ப்பு, மேலும் செயலாற்றல்மிக்க பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுடன் நிறுவனங்களும் நன்மை அடையமுடியும் என்றார் அவர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு, சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஆகியன, முதலாளிகள், தொழில்துறை சங்கங்கள், கல்வி மற்றும் பயிற்சி நடத்துநர்கள் ஆகியோருடன் சேர்ந்து பணிச்சட்டத்தைக் கூட்டாகத் தயாரித்தது.
தற்போது பதிவு செய்துள்ள சுமார் 4,700 வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் வாழ்க்கைத்தொழிலுக்குப் பணிச்சட்டம் வழிகாட்டும். இந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டின் 1,300ல் இருந்து மும்மடங்குக்கு மேலாக அதிகரித்திருக்கிறது.

