2019 சிங்கப்பூர் வளர்ச்சி முன்னுரைப்பு குறைப்பு

2019 சிங்கப்பூர் வளர்ச்சி முன்னுரைப்பு குறைப்பு

2 mins read

நடப்பாண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.3% வளர்ச்சி காணும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் முன்னுரைத்திருந்த அனைத்துலகப் பண நிதியம், அதை இப்போது 0.5 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

அதேபோல, அடுத்த ஆண்டிற்கான வளர்ச்சி விகித முன்னுரைப்பையும் 2.4 விழுக்காட்டில் இருந்து 1 விழுக்காடாக அந்த அமைப்பு குறைத்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்துலகப் பண நிதியம் நேற்று வெளியிட்ட 'வட்டாரப் பொருளியல் கண்ணோட்டம்' அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

2019ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 0% - 1% என்ற அளவில் இருக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், அவ்வளர்ச்சி பூஜ்ஜிய விழுக்காட்டை ஒட்டி இருக்கலாம் எனத் தனியார் பொருளியல் வல்லுநர்கள் சிலர் கணித்துள்ளனர். கடந்த ஆண்டில் சிங்கப்பூர் 3.1% வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மட்டுமின்றி, ஆசியாவின் பெரும்பாலான நாடுகளின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்ற 2018ஆம் ஆண்டில் 6.6 விழுக்காடாக இருந்த சீனாவின் வளர்ச்சி இவ்வாண்டில் 6.1 விழுக்காடாகவும் அடுத்த ஆண்டில் 5.8 விழுக்காடாகவும் சரிவடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த ஆண்டில் 6.8% வளர்ச்சி கண்ட இந்தியா நடப்பாண்டில் 6.1% வளர்ச்சி அடையலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில், ஹாங்காங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகப் பெரிய சரிவைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ல் 3% வளர்ச்சி கண்ட ஹாங்காங் பொருளியல், இவ்வாண்டில் அதில் பத்தில் ஒரு மடங்கே, அதாவது 0.‌3% வளர்ச்சியை மட்டுமே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'உலகப் பொருளியல் கண்ணோட்ட' அறிக்கையில் இவ்வாண்டில் ஹாங்காங் 2.7% வளர்ச்சி பெறும் என அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்திருந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஆசிய நாடுகள் இவ்வாண்டில் 5% வளர்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆக மெதுவான வளர்ச்சி. இருப்பினும், உலகின் ஆக வேகமாக வளரும் வட்டாரமாக ஆசியா திகழும் என்றும் உலக வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அது பங்களிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பணவீக்கமும் சரிந்தது

இதனிடையே, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவில் இவ்வாண்டின் செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் 0.7 விழுக்காடாகக் குறைந்தது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இந்த விகிதம் 0.8 விழுக்காடாக இருந்தது. சேவைத் துறைக்கான பணவீக்கம் குறைந்ததும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் அதிகளவில் குறைந்ததுமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தைப் போலவே செப்டம்பரிலும் 0.5 விழுக்காடாக இருந்தது.