எழுத்துப் பிழைகளுக்காக மன்னிப்பு கோரியது குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

எழுத்துப் பிழைகளுக்காக மன்னிப்பு கோரியது குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

1 mins read
578634f1-5bc5-46b1-b565-809571edf1a1
சமூக ஊடகங்களில் வலம் வந்த தவறான அறிவிப்பு (இடது), திருத்தப்பட்ட அறிவிப்பு (வலது). (படங்கள்: ஐசிஏ, சமூக ஊடகம்) -

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) தமிழ் அறிவிப்புப் பதாகையில் எழுத்துப்பிழைகள் இருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்தப் பிழைகளைக் கண்டுபிடித்து மாற்றிவிட்டதாகவும் பிழைகளுக்கு வருந்துவதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

ஆணையத்தின் புகைப்படம் எடுக்கும் சேவையின் நிறுத்தத்திற்கான அறிவிப்புப் பதாகையில் "ஆணைய" என்ற சொல், தவறுதலாக "அணைய" என்றும் "மற்றும்" என்ற சொல் "மற்றம்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதன்கிழமை அன்று (23/10/2019) காலாங்கில் உள்ள குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையக் கட்டடத்திற்குச் சென்றபோது தவறான வார்த்தைகள் அச்சிடப்பட்ட பதாகையைப் பார்த்ததாகவும் அதனைப் புகைப்படம் எடுத்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகவும் தமிழ் முரசு வாசகர் தெரிவித்தார்.

"இந்த எழுத்துப்பிழைகளுக்காக மன்னிப்பு கேட்கிறோம்," என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் வர்த்தகத் தொடர்பு இயக்குநர் சியா ஹுய் கெங் தமிழ் முரசிடம் நேற்றிரவு தெரிவித்தார்.

"இந்த அறிவிப்பு ஆணையத்தாலேயே தயாரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் அது மின்னிலக்க வடிவத்திற்கு மாற்றப்பட்டபோது அதில் இருந்த தவறுகளை ஆணையத்தினரே கண்டுபிடித்து திருத்தினர்," என்று திருவாட்டி சியா கூறினார். மேலும் தவறாக அச்சடிக்கப்பட்ட பதாகை அகற்றுப்பட்டுவிட்டதாகவும் ஆணையம் தெரிவித்தது.