வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பற்றாக்குறை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 1.98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
வீட்டு விற்பனையின் மொத்த இழப்பு, மத்திய சேமநிதி (சிபிஎஃப்) வீட்டு மானிய வழங்கீடு, தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பு எதிர்பார்ப்புகள் ஆகியவையே இதற்கு காரணம்.
வீட்டுத் திட்டங்கள் மூலம் $2.4 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் வாடகை, வர்த்தக நடவடிக்கைகள் போன்றவை மூலம் கிடைத்த $462 மில்லியன் உபரித் தொகை மூலம் அதை ஓரளவு ஈடுகட்ட முடிந்ததாகவும் வீவக நேற்று வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது.
2018/2019 நிதியாண்டில் மறுவிற்பனை மற்றும் எக்ஸிகியூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளை வாங்கத் தகுதி பெற்றவர்களுக்கு $532 மில்லியன் மசேநிதி மானியம் வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த மானியத் தொகை $466 மில்லியன் ஆக இருந்தது.
மேம்பாட்டைப் பொறுத்தவரையில் வீவகவுக்கு $577 மில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் $639 மில்லியன் பற்றாக்குறைத் தொகையுடன் ஒப்பிட குறைவாகும்.
மேலும், வீட்டு விற்பனையிலும் 38 விழுக்காடு சரிவை வீவக கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 16,608 வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நிதியாண்டில் 26,857 ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 15,300 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத வீவக பேட்டைகளில் அறிமுகம் கண்டன.
மார்ச் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள் தொகையில் 81 விழுக்காட்டினர் வீவக வீடுகளில் வசிக்கின்றனர். இதில் பத்தில் ஒன்பது பேருக்கு அவ்வீடுகள் சொந்தமாக உள்ளன.
பொது வீட்டுச் சந்தை நிலைத்தன்மையுடன் இருப்பதாக குறிப்பிட்ட வீவக தலைவர் பாபி சின், மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது என்றும் புதிய வீடுகளின் விற்பனையும் நல்ல நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் பற்றாக் குறையை ஈடுசெய்ய வீவக நிதியமைச்சிடம் இருந்து மானியம் பெறும். தற்போதைய பற்றாக் குறையை ஈடுசெய்ய நிதியமைச்சு $2.03 பில்லியன் மானியம் அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு 60வது ஆண்டு நிறைவை எட்டியபோதும், எதிர்காலம் சவால் மிக்கதாக இருக்கும் என்பதை வீவக நினைவில் கொண்டிருப்பதாக திரு சின் கூறினார்.
"மூப்படையும் சமூகம், விரைந்து மாற்றம் கண்டு வரும் நகர, சமூக நிலப்பரப்புகள் ஆகியவற்றுக்கு இடையே சும்மா இருந்துவிட முடியாது.
"சிங்கப்பூரர்களுக்கு தரமான, நன்கு வடிவமைக்கப்பட்ட வீடுகளை வழங்க வீவக தொடர்ந்து புத்தாக்கம் காணும், தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளும்," என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

