அதிபர் ஹலிமாவுக்கு அபே பாராட்டு

அதிபர் ஹலிமாவுக்கு அபே பாராட்டு

2 mins read
cf7d2752-23d2-45aa-b3b6-1127c5d2087c
-

ஆண், பெண் பாகுபாடு இல்லாது அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் சமூகத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப் முன் உதாரணமாகத் திகழ்கிறார் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பாராட்டியிருக்கிறார்.

திருமதி ஹலிமா, சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக பொறுப்பு வகித்து பின்னர் நாட்டின் அதிபராகியிருக்கிறார்.

இதனைச் சுட்டிக்காட்டிய திரு அபே, ஜப்பானிலும் பெண்கள் முத்திரையைப் பதிக்கும் வகையில் பாலின சமத்துவம் கொண்ட சமூகம் நீடிக்க உறுதி கூறினார்.

அகாசாகா அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை பிரதமர் அபேவும் அதிபர் ஹலிமாவும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடம் நீடித்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஜப்பானிய மன்னர் நருஹிட்டோ அரியணை ஏறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருமதி ஹலிமா ஜப்பான் சென்றுள்ளார்.

செவ்வாய்க் கிழமை நடைபெற்ற மன்னர் அரியணை ஏறிய நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமர் அபேயைச் சந்தித்த பிறகு ஜப்பானியர்கள் அளித்த வரவேற்புக்கு அதிபர் ஹலிமா நன்றி கூறினார்.

அண்மைய ஹகிபிஸ் சூறாவளியால் ஜப்பானுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இம்மாதம் வீசிய சூறாவளியில் சுமார் 80 பேர் உயிரிழந்தனர். இருந்தாலும் இந்த மோசமான பின்னடைவிலிருந்து ஜப்பானிய மக்கள் மீண்டு வந்ததை அவர் பாராட்டினார்.

பிரதமர் அபேயும் பிரதமர் லீ சியன் லூங் அனுப்பிய அனுதாபச் செய்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையே ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொதுவான பிரச்சினைகளையும் கொள்கைகளையும் குறிப்பிட்ட பிரதமர் அபே, சிங்கப்பூரை மதிப்புமிக்க பங்காளி என்று வருணித்தார்.

அறிவார்ந்த நகரங்களை உருவாக்குதல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகள் போன்றவை இரு நாடுகளுக்கும் பொதுவான அம்சங்களாக இருந்து வருகின்றன.

மேலும் பேசிய திருமதி ஹலிமா, மூப்படையும் மக்கள் தொகை, அறிவார்ந்த நகரங்களை உருவாக்குதல் போன்ற சவால்களில் ஜப்பானுடன் சேர்ந்து செயல்பட விரும்பு வதாகத் தெரிவித்தார்.