உடல் உறுப்பு மாதிரிகளைத் தயாரிக்கும் முப்பரிமாண சாதனம்

உடல் உறுப்பு மாதிரிகளைத் தயாரிக்கும் முப்பரிமாண சாதனம்

2 mins read
06843049-7c50-4d07-ae3e-f05968afb5ec
தொழில்துறை உருமாற்றம் தொடர்பான ஆசிய பசிபிக் வர்த்தகக் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. படம்: நாமிக்/ ஃபேஸ்புக் -

முப்பரிமாண வடிவமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை உடல் உறுப்பு சாதனங்களைப் பற்றிய ஆய்வு உருவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் TUV SUD என்ற ஜெர்மன் நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டு இருக்கிறது.

இத்தகைய முப்பரிமாண வடிவமைப்புத் தொழில்நுட்பங்கள் செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதால் தயாரிப்புத் தொழில்துறை இத்தகைய தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புகிறது.

தேசிய பல்கலைக்கழகத்தின் முப்பரிமாண வடிவமைப்பு உடலுறுப்பு ஆய்வு மையம், நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பிரத்தியேகச் சிகிச்சைகளில் இந்த முப்பரிமாண வடிவமைப்பு முறையைப் பயன்படுத்த விரும்புகிறது.

மருந்தகப் பரிசோதனைகளுக்கு உலோக உடலுறுப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பத்திலும் ஈடுபடுவது இந்த மையத்தின் நோக்கமாக இருக்கிறது.

இத்தகைய நோயாளிகளுக்குத் தேவைப்படும் பிரத்தியேக மருத்துவ சாதனங்களை உரு வாக்குவதில் உலகத் தரம் பின்பற்றப்பட வேண்டியது முக்கியமானது என்று இந்தப் பல்கலைக்கழக ஆய்வு மைய இயக்குநர் ஜெர்ரி யிங் தெரிவித்தார்.

ஆசிய பசிபிக் தொழில்துறை உருமாற்ற மூன்று நாள் வர்த்தகக் காட்சி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. அதில் இடம்பெறும் தேசிய முப்பரிமாண வடிவமைப்புப் புத்தாக்க உடலுறுப்புக் குழும உச்ச மாநாட்டில் (Namic) இந்தக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது.

அந்த உச்ச மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட், முப்பரிமாண தொழில்நுட்பம் போன்ற உற்பத்தித்துறை தொழில்நுட்பங்கள் பொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தை மிகவும் குறைத்து அத்தகைய பொருட்கள் சந்தையில் உடனுக்குடன் கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.