தங்கச் சங்கிலியை விழுங்கிய மாடு; சாணத்துக்காக காத்திருக்கும் குடும்பம்

தங்கச் சங்கிலியை விழுங்கிய மாடு; சாணத்துக்காக காத்திருக்கும் குடும்பம்

2 mins read

சண்டிகார்: ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த காலன்வாலி கிராமத்தில் 30 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை தெருவில் திரிந்த காளை மாடு ஒன்று விழுங்கிவிட்டது.

அதன் சாணம் வழியாக அந்த சங்கிலியை மீட்க எண்ணி, மாட்டைப் பிடித்துவந்து வீட்டில் கட்டி வைத்து, அது சாணமிடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறது ஒரு குடும்பம்.

திருமண விழாவிலிருந்து திரும்பிய பெண் ஒருவர், தாம் கையில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றைக் கழற்றி அருகிலிருந்த காய்கறிப் பெட்டியில் வைத்துவிட்டு சமையல் வேலைகளைச் செய்தார்.

காய்கறிப் பெட்டியில் தங்கச் சங்கிலியை வைத்ததை மறந்துவிட்டு, அதில் காய்கறிக் கழிவுகளைக் கொட்டி, வீட்டின் பின்னால் இருந்த மாட்டுத் தீவனப் பெட்டியில் போட்டுவிட்டார்.

தனது தங்கச் சங்கிலியைக் காய்கறிப் பெட்டியில் வைத்தது வெகு தாமதமாகத்தான் அவருக்கு நினைவிற்கு வந்தது. மாட்டுத் தீவனப் பெட்டியில் தேடியபோது சங்கிலி கிடைக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா காட்சி களைப் பார்த்தபோது அதை மாடு தீவனத்துடன் சேர்த்துச் சாப்பிட்டது தெரியவந்தது.

அந்த மாட்டைப் பிடித்து வந்த அவர்கள், கால்நடை மருத்துவரை அணுகியபோது, அறுவைசிகிச்சை செய்து மாட்டின் வயிற்றில் உள்ள சங்கிலியை அகற்றவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதால் மாட்டின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

மாட்டின் கழிவிலேயே சங்கிலியைத் தேட முடிவு செய்து, அது எப்போது சங்கிலியுடன் சாணமிடும் என்று அந்தக் குடும்பத்தினர் காத்துக்கிடக்கின்றனர்.

மாடு சாப்-பிட்ட அந்த தங்கச் சங்-கி-லி-யின் மதிப்பு ரூ1.18 லட்-சம் என்று கூறப்-ப-டு-கிறது.