கடலில் ரசாயனக் கசிவைத் தூய்மைப்படுத்தும் பாவனைப் பயிற்சி

கடலில் ரசாயனக் கசிவைத் தூய்மைப்படுத்தும் பாவனைப் பயிற்சி

2 mins read
438fecfe-2802-40d3-85a0-8ce718d2bfc3
எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படகான (எம்ஆர்வி) ரெட் டால்பின் (நடுவில்), அதிவிரைவு தீயணைப்பு வண்டி (ஆர்எஃப்வி) ரெட் ஸ்வாட்ஃபிஷ் (முன்புறம் இருப்பது). அருகில் ராயல் ஜாஸ்பர் எண்ணெய்க் கப்பல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் கடலில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் 'மோதிக்கொண்டதில்' 'ரசாயனக் கசிவு' ஏற்பட்டுவிட்டது.

அந்தக் கசிவைக் கட்டுப்படுத்தி, கடலைச் சுத்தம் செய்ய மீட்பு கப்பல்கள் உடனே களத்தில் இறங்கின.

இந்த பாவனைப் பயிற்சியை பல அமைப்புகள் கொண்ட முகவை நேற்று நடத்தியது.

உலகின் ஆக நெரிசல்மிக்க கடல் பகுதிகளில் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல் பகுதியும் ஒன்று.

பயிற்சியின்போது 128 மீட்டர் நீளமுள்ள எண்ணெய்க் கப்பல் ஒன்று மற்றோர் எண்ணெய்க் கப்பலுடன் சிங்கி வாட்டர்வேய் பகுதியில் 'மோதியது'.

அதனால் 500 டன் எடையளவு கொண்ட 'சைலீன்' ரசாயனம் கடலில் கசிந்தது போன்ற பாவனை இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு இரண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கப்பல்கள் விரைந்தன.

தீயைக் கட்டுப்படுத்த அவை நீரைப் பாய்ச்சி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தன.அதன் பிறகு கசிவு பரவாமல் தடுக்க எண்ணெய்க் கசிவைச் சுற்றி மிதக்கும் தடுப்புகள் போடும் கப்பல் ஒன்றும் செயல்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) இந்த பாவனைப் பயிற்சியை மேற்கொண்டது.

இதில் எம்பிஏ, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் கடலோரக் காவல் படை, சிங்கப்பூர் கடல் படை போன்ற 20 அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர்.

"இந்தப் பயிற்சியின் மூலம் நெருக்கடியான நேரங்களில் ஒருங்கிணைந்த முறையில் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்று கடல்துறை, துறைமுக ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் கடற்சேவைப் பிரிவுகளின் மூத்த இயக்குநர் கேப்டன் டக்னேஷ் கணேசன் தெரிவித்தார்.