வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் தங்களது வேலைகளுக்குத் தேவைப்படும் திறன்கள் பற்றியும் வாழ்க்கைத்தொழிலில் எவ்வாறு முன்னேற்றமடையலாம் என்பது பற்றியும் அறிந்துகொள்ள வசதியாக, இந்த அதிகாரிகளுக்கான திறன்சார்ந்த பணிச்சட்டத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவித்துள்ளார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் மாநாட்டில் நேற்று பணிச்சட்டத்தை வெளியிட்டுப் பேசிய அமைச்சர், வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்திற்கு நன்கு திட்டமிட்டு, தகவல்களை அறிந்து தீர்மானங்கள் எடுக்க இந்தப் பணிச்சட்டம் உதவும் என்றார்.
திறன் அடிப்படையிலான ஆள்சேர்ப்பு, மேலும் செயலாற்றல்மிக்க பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுடன் நிறுவனங்களும் நன்மை அடையமுடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தப் பணிச்சட்டம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை பற்றியும் தொழில்துறையில் இருப்ப வர்களுக்கான முன்னேற்றப் பாதைகள், உத்தேச பொறுப்புகள் பற்றியும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. தற்போது நடப்பிலுள்ள, எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய திறன்களையும், திறன் மேம்பாட்டுக்கான பயிற்சித் திட்டங்களின் பட்டியலையும் பணிச்சட்டம் உள்ளடக்குகிறது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஆகியன, முதலாளிகள், தொழில்துறை சங்கங்கள், கல்வி மற்றும் பயிற்சி நடத்துநர்கள் ஆகியோருடன் சேர்ந்து பணிச்சட்டத்தைக் கூட்டாகத் தயாரித்தது.
தற்போது பதிவு செய்துள்ள சுமார் 4,700 வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் வாழ்க்கைத்தொழிலுக்குப் பணிச்சட்டம் வழிகாட்டும். இந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டின் 1,300ல் இருந்து மும்மடங்குக்கு மேலாக அதிகரித்திருக்கிறது.
வரும் ஆண்டுகளில், பொருளாதாரம் நிலைபெறுவது போல் பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையும் நிலைபெறும் என நம்புகிறோம். அவர்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட உதவும் வகையில் அவர்களுடைய திறன்களை மேம்படுத்த இதுவே சரியான தருணம் என்றார் அவர்.
2028 திட்டத்தில் உள்ள வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதார இலக்குகளையும் சிங்கப்பூர் அடைய இந்த அதிகாரிகள் முக்கியமானவர்கள் என்றார் அவர்.
மிகவும் பாதுகாப்பான, சுகாதாரமான வேலையிடங்களைக் கொண்ட தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை உருவாக்கும் உத்திகளை வடிவமைக்கும் 10 ஆண்டுத் திட்டம் இது. வேலையிட உயிரிழப்பை 100,000க்கு ஒன்றாகக் குறைப்பது இலக்கு.
தற்போதுள்ள 53 தொழில்நுட்பத் திறன்களுடன் புதிதாக உருவாகும் தொழில்நுட்பத் திறன்களையும் மேலும் 18 பொதுவான திறன்களையும் இப்பணிச்சட்டம் உள்ளடக்கும்.

