சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் சாலைகளில் தானியங்கி வாகனம் பரிசோதனை

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் சாலைகளில் தானியங்கி வாகனம் பரிசோதனை

2 mins read
46109ed7-df1c-4fdd-8402-c965f21a9ea9
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக நகரத்தில் இயக்கப்படும் ஆய்வு தொழில்நுட்பத்துக்கான சிங்கப்பூர் - எம்ஐடி கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட தானியங்கி வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தானியங்கி வாகனங்கள் சிங்கப்பூரின் மேற்குப் பகுதி முழுவதும் சோதிக்கப்பட உள்ளதை அடுத்து, புக்கிட் தீமா, கிளமெண்டி, ஜூரோங் போன்ற அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டைகளின் சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயங்கவுள்ளன.

இதன்மூலம் நிறுவனங்கள் வாகனங்களைச் சோதனை செய்வதற்கான பொதுச் சாலைகளின் இடப்பகுதி 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாகிறது.

பரிசோதனைக்காக சாலைப் பகுதிகள் விரிவாக்கப்படுவது அடுத்த பல ஆண்டுகளில் மெதுமெதுவாக, சிறிய அளவில் இடம்பெறும். இதில் பொதுமக்களின் பாதுகாப்பே அதிமுக்கியத்துவம் பெற்றிருக்கும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

அறிவார்ந்த போக்குவரத்து தொடர்பான உலக அமைப்பின், தானியங்கி வாகனங்கள் குறித்த உச்சநிலை மாநாட்டில் பேசிய டாக்டர் ஜனில், பொதுமக்கள் பரவலாக ஏற்றுக்கொள்வதில்தான் தானியங்கி வாகனங்களின் செயல்பாட்டின் வெற்றி அடங்கியுள்ளது என்று கூறினார். விபத்துகள் ஏற்பட்டால், இந்த வெற்றி சாத்தியமாகாது என்றார் அவர்.

வேறுபட்ட சூழல்களைக் கொண்ட அதிகமான சோதனைப் பகுதி, பரந்த அளவிலான போக்குவரத்துச் சூழ்நிலைகள், மற்றும் சாலை நிலைமைகளில் சாலைச் சோதனைகளை படிப்படியாக நடத்த உதவும்," என்று தானியங்கி வாகன தொழில்துறையினர் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து சோதனைக்கான சாலைப் பகுதிகளின் விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

நகரங்களுக்கிடையிலான சேவைகளும் நீண்ட தூரப் பயணங்களும் பாதுகாப்பாக அமையும் வகையிலும், தானியங்கி வாகனங்களின் முன்னோட்ட சோதனையை 2020ன் தொடக்கத்தில் செயல்படுத்தவும் தானியங்கி வாகனங்களின் திறன்களின் முழுமையான சோதனைக்கு இது ஆதரவாக அமையும் என்று ஆணையம் கூறுகிறது.

முன்னோடித் திட்டத்தின் கீழ், குடியிருப்பாளர்களும் ஊழியர்களும் தானியங்கி பேருந்துகளையும் துணைப் பேருந்துகளையும் பயன்படுத்த கடந்த 2017ல், பொங்கோல், தெங்கா, ஜூரோங் புத்தாக்க வட்டாரம் ஆகிய பகுதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டது.

குறிப்பிட்ட தொகுதிகளில் தானியங்கி வாகனங்களின் முன்னோட்ட சோதனை இடம்பெறுவதாக இருந்தால், சமூகத் தலைவர்களும் அடித்தளத் தலைவர்களும் முன்னதாகவே தொடர்பு கொள்ளப்படு வார்கள் என்று ஆணையம் கூறியது.

சாலைப் பயனாளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அனைத்து தானியங்கி வாகனங்களிலும் அடையாளக் குறிகளும் விளக்கங்களும் இடம்பெற வேண்டும். அந்த வாகனங்கள் சாலையில் இயக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, அவை முழுமையான பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், தேவை ஏற்பட்டால் உடனே வாகனத்தின் கட்டுப்பாட்டைக் கையிலெடுக்கக்கூடிய தகுதிபெற்ற பாதுகாப்பு ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தில் இடம்பெற வேண்டும்.

கடுமையான திறன் சோதனைகளில் இந்த தானியங்கி வாகனங்கள் தேர்ச்சி பெற்றதும் மேற்கொண்டு சோதனை விரிவாக்கங்கள் அனுமதிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.

தங்கள் பகுதியில் தானியங்கி வாகனங்கள் பரிசோதிக்கப்படுவது குறித்து மேற்குப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மாறு பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ள னர். அந்த வாகனங்களின் வேகம், சாலை நிலைமைகளுக்கு ஏற்ப அவை எவ்வாறு செயல்படும் போன்றவை குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.