இருநூற்றாண்டு நிறைவு போனஸ்; பலனடையும் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள்

இருநூற்றாண்டு நிறைவு போனஸ்; பலனடையும் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள்

2 mins read

வரும் நவம்பர் மாதத்தில் மொத்தம் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் இருநூற்றாண்டு நிறைவு போனஸ் திட்டத்தின்கீழ் அதிகபட்சம் மூன்று விதமான அனுகூலங்களைப் பெறவுள்ளனர்.

இதன்படி பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு, ரொக்கம், வேலை நலன் ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் அவர்களது மத்திய சேமநிதி கணக்கிலுள்ள தொகையும் அதிகரிக்கப்படலாம் என்று நேற்று நிதி அமைச்சு தகவல் வெளியிட்டது.

சிங்கப்பூர் நிறுவப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிப்பதற்காகவும் உதவி தேவைப்படும் தனிநபர்களுக்குக் கூடுதல் உதவி அளிப்பதற்காகவும் இந்த போனஸ் திட்டம் குறித்து அரசாங்கம், இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தது. இந்தச் சிறப்பு போனஸ் திட்டத்துக்காகும் செலவு மொத்தம் 1.1 பில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.

ரொக்கமாக வழங்கப்படவுள்ள போனஸ், வேலைநலன் ஊக்கத்தொகை இருநூற்றாண்டு போனஸ் ஆகியவற்றின் தொடர்பிலான விவரங்கள் குறுந்தகவல்வழி இம்மாதம் இறுதிக்குள் தகுதிபெறுவோருக்கு அனுப்பப்படும்.

வேலைநலன் ஊக்கத்தொகை இருநூற்றாண்டு போனஸ் திட்டம், மத்திய சேமநிதி கணக்கில் பணம் நிரப்பும் திட்டம் ஆகியவற்றுக்கான கடிதம், தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும்.

வேலைநலன் ஊக்கத்தொகை இருநூற்றாண்டு போனஸை இம்மாதமும் மத்திய சேமநிதி கணக்கில் பணம் நிரப்புதல், பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு ஆகியவற்றை அடுத்த மாதமும் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் பெறுவர்.

21 வயதும் அதற்கு மேற்பட்டோரும் 2017ஆம் ஆண்டில் வருடாந்தர வருமானமாக $28,000 வரை சம்பாதித்திருந்தால் அவர்கள் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறுவர்.

2018ஆம் ஆண்டின் இறுதியில் வீட்டின் மொத்த வருடாந்தர வருமான $13,000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் $300 ரொக்கம் வழங்கப்படும். $13,000க்கு மேல் இருந்து $21,000க்குள் இருந்தால் $150 ரொக்கம் அளிக்கப்படும்.

வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்கீழ் உள்ள ஊழியர்கள், தங்களின் மொத்த வேலைநலன் கட்டணத்தில் 2018ஆம் ஆண்டில் செய்த வேலைக்காக மேலும் 10% பெறுவர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறைந்தது $100 இதன்படி வழங்கப்படும்.

50 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட 300,000 சிங்கப்பூரர்களின் மத்திய சேமநிதி கணக்குகளில் பணம் நிரப்பப்படும். 50 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு $300 முதல் $500 வரை நிரப்பப்படும்.

55 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு $600 முதல் $1,000 வரை நிரப்பப்படும்.