மலாக்கா உடற்பாக வழக்கு தொடர்பில் சிங்கப்பூரரான ஷாஹ்ருல் நிஸாம் ஸுராய்மி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயர் கெரொ நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட 31 வயது ஷாஹ்ருல், தன் மனைவியையும் மாற்றான் மகனையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டு கூறப்பட்டபோது ஷாஹ்ருல் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் தலையை மட்டும் ஆமாம் என்று அசைத்ததாகக் கூறப்பட்டது.
தன் மனைவியான 27 வயது நூர்ஃபஸிரா பிடினை இம்மாதம் ஆறாம் தேதியன்று இரவு 9 மணிக்கும் பின்னிரவு 1 மணிக்கும் இடையே ஒரு வீட்டில் அவர் கொலை செய்ததாக நம்பப்படுகிறது. அதை அடுத்து 11 வயதான முகம்மது இமான் அஷ்ரஃப் அப்துல்லாவை அதே இடத்தில் ஷாஹ்ருல் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் ஷாஹ்ருல் மரண தண்டனையை எதிர்நோக்குவது உறுதி.
இம்மாதம் 10ஆம் தேதியன்று புல் வெட்டும் ஊழியர் ஒருவர் பல உடற்பாகங்களைக் கண்டுபிடித்ததை அடுத்து சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியுடன் மலேசிய போலிஸ் ஷாஹ்ருல்லைக் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட இருவரது தலைகளும் அவர் வசித்த வீட்டின் கூரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. குடும்பச் சண்டை வன்முறையாக வெடித்ததில் ஷாஹ்ருல் தன் மனைவியைக் கத்தியால் தாக்கியதாகவும் அதற்குச் சாட்சியாக இருந்த மாற்றான் மகனையும் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
ஷாஹ்ருல்லை பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கு மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்படும்.

