10 ஆண்டுகளில் ஆக அதிகமான வேலையின்மை விகிதம்

10 ஆண்டுகளில் ஆக அதிகமான வேலையின்மை விகிதம்

2 mins read
fa90527b-9c44-4c87-9e79-91ac305d834b
-

நாட்டின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், 2009ஆம் ஆண்டில் இருந்த அதே உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்குறைப்பு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்குக் காரணம். அதே நேரத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதமும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இப்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட ஆக அண்மைய முன்னோட்டக் கணிப்புகளில் இந்த இரு மாறுபட்ட புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தின் 2.2 லிருந்து செப்டம்பர் மாதத்தில் 2.3க்கு அதிகரித்தது.

சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் 3.2 விழுக்காட்டிலிருந்து 3.3 விழுக்காட்டுக்குக் கூடியது. குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான விழுக்காடு 3.1 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான வேலையின்மை விகிதங்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக இருப்பதாக செப்டம்பர் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆட்குறைப்பு கடந்த காலாண்டில் 2,900க்குக் கூடியது. இதற்கு முந்திய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,320 ஆகவும் ஓர் ஆண்டுக்கு முன்னர் 2,860 ஆகவும் இருந்தது. சேவைத் துறையில் அதிக எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு, இம்மூன்றாம் காலாண்டில் 22,400 எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டு பணிப்பெண் ஊழியர்கள் அடங்கா. இதற்கு முந்திய காலாண்டில் இந்த எண்ணிக்கை 6,200ஆக அதிகரித்தது. இதுவே சென்ற ஆண்டில் 16,700ஆக அதிகரித்தது. இவ்விரண்டையும் மூன்றாம் காலாண்டின் வேலைவாய்ப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது கூடுதல் வளர்ச்சியே.

கிட்டத்தட்ட 16,100 பேர் சேவைத் துறையில் வேலை தேடிக்கொண்டதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றது அமைச்சு. சமூக மற்றும் தனிநபர் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் பெரும்பாலும் வளர்ச்சி காணப்பட்டது.

மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு, சென்ற காலாண்டைக் காட்டிலும் சரிவைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மூன்று காலாண்டுகளாகச் சரிவைச் சந்தித்து வந்த உற்பத்தித் துறை, இக்காலாண்டில் கூடுதலாக 1,200 ஊழியர்களை நியமித்துள்ளது. 2014ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் சாதகமான வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இதுதான் நான்காவது முறை.

தனியார், பொதுத் துறைகளின் கட்டுமான வேலைகளும் அதிகரித்து வர, கட்டுமானத் துறையில் 5,300 பேர் கூடுதலாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 11 காலாண்டுகளாக வேலைவாய்ப்பு தொடர்பில் வீழ்ச்சியைக் கொண்டிருந்த இத்துறை இப்போது சற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளது. வேலையிடங்கள் காலியாக இருப்பதுடன் வேலைவாய்ப்பு வளர்ச்சி மேம்பட்டும் உள்ளது. ஆனால் வேலையின்மை, ஆட்குறைப்பு விகிதங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது ஊழியர் சந்தையில் வேலைவாய்ப்புகளுக்கும் வேலை நியமனத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் காட்டுகிறது.