பணிப்பெண்ணை வெளிப்புற சரிவுக் கண்ணாடி துடைக்க வைத்த வழக்கில் சாட்சியம்

பணிப்பெண்ணை வெளிப்புற சரிவுக் கண்ணாடி துடைக்க வைத்த வழக்கில் சாட்சியம்

2 mins read
4b00c099-c409-4447-9138-1fef840cb50e
குமாரி தக்குலாட் ரோஸ் மே மாட்டா என்ற பணிப்பெண்ணிற்கு (நடுவில்) பாதுகாப்பான வேலையிடச் சூழலை வழங்கத் தவறியதற்காக பெலின்டா ஹூபர் (இடது) குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். குமாரி மாட்டா கண்ணாடியைத் துடைப்பதைப் பார்த்ததாக சாட்சியம் கூறிய பக்கத்து வீட்டில் பணிபுரியும் குமாரி வெலி-காஸ் லைன் பால்போ (வலது). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு பணிப்பெண் ஒரு வீட்டின் இரண்டாவது மாடி வெளிப்புற சாய்வுக் கண்ணாடியின் மேல் நின்றுகொண்டு அதைத் துடைத்ததை 2017ல் எடுக்கப்பட்ட ஒரு படம் காட்டியது. அப்படி கண்ணாடியைத் துடைத்த அந்த வீட்டின் இரண்டாவது பணிப்பெண் அவர் என்று நேற்று விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. அப்படி கண்ணாடியைத் துடைக்கும்படி பெலின்டா ஹூபர் என்ற தங்கள் முதலாளி தங்களிடம் கூறியதாக அந்த இரண்டு பணிப்பெண்களும் தன்னிடம் தெரிவித்ததாக குமாரி வெலிகாஸ் லைன் பால்போ என்ற பணிப்பெண் சாட்சியம் அளித்தார். டன்னர்ன் ரோட்டிற்கு அருகே இருக்கும் கோல்டுஹில் அவென்யூவில் உள்ள அந்த வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் குமாரி பால்போ வேலை பார்த்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூவருமே பிலிப்பீன்சை சேர்ந்த பணிப்பெண்கள். குமாரி தக்குலாட் ரோஸ் மே மாட்டா என்ற பணிப்பெண்ணிற்கு 2017 ஜூலையில் பாதுகாப்பான பணியிடத்தை வழங்கத் தவறியதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் அந்த 37 வயது ஆஸ்திரேலிய முதலாளியான பெலின்டா ஹூபர் விசாரணை கோருகிறார்.

2017ல் தன் முதலாளியின் வீட்டில் துணிகளை மடித்துக் கொண்டிருந்தபோது குமாரி மாட்டா வெளிப்புற சரிவுக் கண்ணாடியில் இருந்ததைத் தான் பார்த்ததாக குமாரி பால்போ சாட்சியம் அளித்தார். அப்படி நிற்பது ஆபத்தானது என்று தான் அந்தப் பணிப்பெண்ணிடம் கூறியதாகவும் குமாரி பால்போ தெரிவித்தார். அப்படி கண்ணாடியைத் துடைக்கும்படி தன்னுடைய முதலாளி தன்னிடம் கூறியதாக குமாரி மாட்டா தெரிவித்ததாகவும் பால்போ சாட்சியம் அளித்தார்.

தான் துடைப்பதை படம் எடுக்கும்படி குமாரி பால்போவிடம் குமாரி மாட்டா கேட்டதாகவும் அவரும் அப்படியே செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சிடம் அந்தப் படத்தைக் கொடுக்கலாமா என்று தான் கேட்டதற்கு கொடுக்கலாம் என்று குமாரி மாட்டா பதில் கூறியதாகவும் பால்போ சாட்சியம் அளித்தார்.ஆனால் அந்தப் படம் அமைச்சிடம் கொடுக்கப்படவில்லை. பதிலாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது. பெலின்டா ஹூபர் தற்போது $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை இன்று தொடரும்.