மன்னர் மந்திரி, வடை சுடும் பாட்டி என நமது பாரம்பரிய கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களைக் கொண்டுள்ள மூன்று தமிழ் மொழி காணொளிகள் அண்மையில் அரசாங்க அமைப்புகளால் வெளியிடப்பட்டன. கடந்த வாரம் வெளியீடு கண்ட அந்தக் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
அவற்றில் ஒன்றைப் பிரதமர் லீ சியன் லூங் இவ்வாரம் திங்கட்கிழமை (அக்டோபர் 21ஆம் தேதி) வெளியிட்டார். கவனத்திற்குரிய செய்தியைக் கொண்டுள்ள நகைச்சுவையான காணொளி இது என்று திரு லீ, தமது பதிவில் குறிப்பிட்டார்.
தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றொரு காணொளியை வியாழக்கிழமை வெளியிட்டார்.
இத்தகைய கதாபாத்திரங்களின் மூலம் அந்தக் காணொளிகள், அரசாங்கக் கொள்கைகளை நகைச்சுவையான முறையில் விளக்குகின்றன. மன்னர் ஒருவர் மற்றொரு மன்னரை ஃபேஸ்புக்கில் "போக்" செய்வது, வடை மட்டும் செய்து மற்றவர்களின் நாவுக்குச் சலிப்பூட்டிய சமையல்காரப் பாட்டி, அரசாங்கத்தின் 'மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்' திட்டத்தின் வழி புதிய தின்பண்டங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொள்வது போன்றவற்றைக் காட்டி அரசாங்கக் கொள்கைகள் மக்களுக்கு நகைச்சுவை ரசனையுடன் விளக்கப்படுகின்றன.
நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு போன்றவற்றுக்குத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்பட வடிவிலான காணொளிகளைத் தீபாவளித் திருநாளுக்காகவும் அரசாங்க அமைப்புகள் இவ்வாறு தயாரித்துள்ளன.

