இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கை, கடந்த காலாண்டைக் காட்டிலும் அவ்வளவாகக் குறையவில்லை. வீடு வாங்குவோர் கடன்களையும் மானியங்களையும் மேலும் எளிதாகப் பெறச்செய்யும் அரசாங்கக் கொள்கைகளின் அறிமுகத்தால் கடந்த காலாண்டிலும் இந்தக் காலாண்டிலும் அதிக எண்ணிக்கையில் பலர் வீடுகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது.
ஜூலை மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே மறுவிற்பனை வீட்டு விற்பனையின் எண்ணிக்கை 6,264 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இரண்டாவது காலாண்டின்போது 6,276 ஆக இருந்ததாக வீவக வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த எண்ணிக்கை, முதல் காலாண்டில் விற்பனையான 4,835 வீடுகளைக் காட்டிலும் 29.8 விழுக்காடு அதிகம்.
மறுவிற்பனை வீட்டு விலைகள் சற்று உயர்ந்ததாக ஆக அண்மை வீவக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தக் காலாண்டின் விலைகள், கடந்த காலாண்டின் விலைகளைக் காட்டிலும் 0.1 விழுக்காடு உயர்ந்தன.
இவ்வாண்டு முழுவதற்கும் 22,000 முதல் 24,000 மறுவிற்பனை வீடுகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

