முழு நேர தேசிய சேவையாளருக்கு மரணம் விளைவித்த சம்பவம்: அதிகாரி மீது குற்றச்சாட்டு

முழு நேர தேசிய சேவையாளருக்கு மரணம் விளைவித்த சம்பவம்: அதிகாரி மீது குற்றச்சாட்டு

3 mins read

முழு நேர தேசிய சேவையாளர் லியூ காய் மரணமடைந்தது தொடர்பில் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி ஒருவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.

முன்யோசனையின்றி செயல்பட்டு திரு லியூவுக்கு மரணம் விளைவித்ததாகக் கூறி 'கேப்டன்' ஓங் லின் ஜி, 28, மீது குற்றம் சாட்டப்பட்டது. இவரது உத்தரவின் பேரிலேயே திரு லியூ, லேண்ட் ரோவர் வாகனத்தை இயக்கியதாகக் கூறப்பட்டது.

பயோனிக்ஸ் கவச வாகனம் ஒன்று, பின்புறமாகச் சென்று, திரு லியூ ஓட்டிச் சென்ற லேண்ட் ரோவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இரு வாகனங்களுக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற பாதுகாப்பு விதிமுறை பின்பற்றப்படவில்லை என நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

'முராய் அர்பன்' பயிற்சி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஓங்கிற்கு ஐந்தாண்டுகள் வரை சிறையும் அல்லது அபராதமும் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

சம்பவம் தொடர்பான படங்களைப் பரப்பியதன் தொடர்பில் மேலும் ஐவர் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களுள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முகம்மது ஆரிஃப் அஸ்மானும் முகம்மது ஹைக்கல் முகம்மது அபிதினும் சம்பவ இடத்தில் இருந்தனர் என்றும் சம்பவத்தைப் படமெடுத்த அவர்கள் அதை வாட்ஸ்அப் வழியாகப் பரப்பினர் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படங்களைப் பெற்ற பிராண்டன் டான் ஜியன் ஜெட், துங் யு சுவென், முகம்மது ஸாக்கி ஹாஜி மொக்தார் ஆகிய மூவரும், அவற்றின் ரகசியத்தன்மையைப் பற்றி அறிந்திருந்தும், அவற்றைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

முதலாம் நிலை கார்ப்பரல் திரு லியூ காய் மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைத் தகவல்களைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.

பயோனிக்ஸ் வாகனம் பின்புறமாகச் செல்வதை நிறுத்தும்படி அதன் பின்னால் இருந்த வழிகாட்டி ஓட்டுநருக்குப் பலமுறை உத்தரவிட்டும் அவ்வாகனம் நிற்கவில்லை என்றும் லேண்ட் ரோவர் வாகனத்தின் முன்பக்கத்தில் மோதி, அதன்மேல் ஏறிய பிறகே அது நின்றது என்றும் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ நாளன்று, கேப்டன் ஓங், லேண்ட் ரோவர் வாகனத்தை இயக்கும்படி திரு லியூவைப் பணித்தார். ஓங் அந்தப் பயிற்சியைப் பார்வையிட்டு, அதில் பங்கெடுத்த துருப்பினரை மதிப்பிட வேண்டியிருந்தது.

பயிற்சியின்போது, முன்னால் இருந்த சந்திப்பு ஒன்றில் பல வாகனங்கள் சென்றதைக் கண்டதும் அந்த பயோனிக்ஸ் கவச வாகனம் நிறுத்தப்பட்டதாக விசாரணைக் குழுவின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

அந்தக் கவச வாகனத்தில் இருந்த தேசிய சேவையாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக அதைப் பின்தொடர்ந்து சென்ற லேண்ட் ரோவர் வாகனமும் சற்று தொலைவிலேயே நிறுத்தப்பட்டது.

ஆனால், கவச வாகனம் மெதுவாகச் சென்றதைக் கண்ட ஓங், அந்த வாகனத்தை முந்திச் செல்லுமாறு திரு லியூவிடம் அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அந்த உத்தரவை திரு லியூவும் செயல்படுத்த முனைந்தார். ஆனால், கவச வாகனம் நின்றதும் தமது வாகனத்தையும் அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. ஆயினும், இவ்விரு வாகனங்களுக்கு இடையே 19.8 மீ. இடைவெளியே இருந்ததாகக் கூறப்படுகிறது.

பயிற்சிப் பாதுகாப்பு விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி 30 மீ. இடைவெளியை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு ஓங்கிற்கு இருந்ததை விசாரணைக் குழு சுட்டிக்காட்டியது.

திரு லியூவிற்கு மரணம் விளைவித்த இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்கும் வகையில் பயோனிக்ஸ் கவச வாகனத்தின் பின்புறம் 'ரியர்வியூ கேமரா' பொருத்தப்பட வேண்டும் என்பது அதில் ஒன்று.

2017 செப்டம்பர் முதல் சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சியின்போது நான்கு மரண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.