ஜாலான் உலு செம்பவாங்கில் 1995ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலைக்கு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் மீது விசாரணை தொடங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் மேல்முறையீட்டில் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.
இது, 71 வயது திரு நடராஜூ சிவானந்தன் பணியாற்றிய நீதிமன்ற வழக்குகளில் ஒன்றாகும்.
ஐம்பத்தொரு ஆண்டுகள் நீதி மன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த திரு சிவானந்தன், தாம் சந்தித்த நீதிமன்ற வழக்குகளில் இருந்து 15 சுவாரஸ்ய வழக்குகளைப் பற்றிய தமது அனுப
வங்களை ஒரு நூலாகத் தொகுத்துள்ளார்.
'பியோன்ட் ஏ ரீசனபல் தாட்,' என்ற தலைப்பில் 170 பக்கங்
களைக் கொண்ட இந்நூலின் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற 81 வயது வழக்கறிஞர் டாக்டர் கோபாலன் ராமன் வருகை புரிந்தார்.
உயர், அரசு, குடும்பம், சிவில், குற்றவியல் போன்ற நீதிமன்றப் பிரிவுகளில் பணியாற்றிய அவர் தாம் உரைபெயர்த்த வழக்குகளே தமக்கு இந்நூலை எழுத உந்துதலாக இருந்ததென குறிப்பிட்டார்.
தாம் உரைபெயர்த்த வழக்குகளில் கொலை வழக்குகள் அதிக நேரம் எடுக்கும் என்றார் திரு சிவா னந்தன். அதுவே தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஊக்கமூட்டியதாக குறிப்பிட்ட அவர் அவற்றை நூலாகப் படைக்க மூன்று ஆண்டுகள் எடுத்ததாக சொன்னார்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அவருக்கு இருந்த அதீத பற்றும் அவரை எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது.
முதுபெரும் நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக இருந்தாலும் நூலுக்காகத் தாம் பணியாற்றிய வழக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் சவால்களை எதிர்நோக்கினார் திரு சிவானந்தன்.
"வழக்குகள் பற்றி குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதி செய்யவேண்டியிருந்தது. அதற்காக நீதிபதி ஒருவரை நாடவேண்டியிருந்தது," என்றார் அவர்.
உற்றார், உறவினர் அருகில் அமர்ந்திருக்க, உணர்ச்சிகள் பொங்கி வழிந்திருக்க, இக்கட்டான சூழ்நிலையில் நிலைகுலைந்துபோன குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற வழக்குகளின்
போது தாம் பெற்ற அனுபவங்களை நூலில் ஆழமாக விவரித்துள்ளார் திரு சிவானந்தன்.
'மெமுவோர்ஸ்' எனும் நூலை அடுத்து இரண்டாம் ஆங்கில புத்தகமாக 'பியோன்ட் ஏ ரீசனபல் தாட்' டை அறிமுகம் செய்த அவர் ஒரு தமிழ்க் கவிஞராகவும் வலம் வந்துள்ளார்.
'எண்ண அலைகள்' என்ற தலைப்பில் தாய், மொழி, பெண், விலங்குகள் என பல கருப்பொருளைக் கொண்ட சுமார் 17 தமிழ் கவிதைகளைப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் திரு சிவா.
நீதிமன்ற வழக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என்று குறிப்பிட்ட அவர், முதியவர்களும் மற்ற துறைகளில் பணி
யாற்றி வரும் நிபுணர்களும் தங்களின் அனுபவங்களை நூல்கள் மூலம் பகிர்ந்துகொள்வது மற்ற வர்களுக்கும் பலன் அளிக்கும் என்றும் திரு சிவா குறிப்பிட்டார்.

