சிரிக்க, சிந்திக்கத் தூண்டும் சிறப்பு தீபாவளிக் காணொளி

சிரிக்க, சிந்திக்கத் தூண்டும் சிறப்பு தீபாவளிக் காணொளி

2 mins read
b7fab1fc-c23d-4703-9fac-bb44f0137c6f
உள்ளூர் பிரபலங்கள் இடம்பெறும் gov.sg விளம்பர காணொளிகள். படம்: gov.sg -

ராஜா, ராணிக்கு சமைத்துத்தர அரண்மனையில் பாட்டி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவருக்கு வடை மட்டும்தான் சுடத் தெரியும்.

இவரின் சமையலை நம்பி எப்படி 'கஜகலி' நாட்டு மன்னருடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது என ராஜாவும் ராணியும் திண்டாடுகின்றனர்.

இந்த விவகாரம் பாட்டிக்குத் தெரிய வருகிறது. "எத்தனை காலம்தான் எண்ணெய்ச் சட்டியில் வடை சுட்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது," என பாட்டி நினைக்கிறார்.

மாற்றத்திற்குத் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள அரசாங்கத்தின் 'மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்' (Adapt and Grow) திட்டத்தின் வாயிலாக தம் சமையல் திறனை மேம்படுத்திக்கொண்டார்.

கற்றதை நடைமுறையாக்கும் விதத்தில் புதுவித பதார்த்தங்களைச் சமைத்து பாட்டி அசத்துகிறார், ராஜாவும் ராணியும் ஆனந்தமடைகிறார்கள்.

இந்த ஒன்றரை நிமிட விளம்பரக் காணொளியும் 'சார்ஸ்' (CHAS) திட்டம் தொடர்பான மற்றொரு தீபாவளிக் காணொளியும் இம்மாதம் gov.sg தமது இணையப் பக்கத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒளிவழியிலும் வெளியிட்டதிலிருந்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பிரதமர் லீ சியன் லூங்கும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் இந்தக் காணொளி

யின் தயாரிப்பைப் பாராட்டி தங்களது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.

"மாறிவரும் வேலையிடச் சூழலில், உங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வதன் முக்கியத்தை இந்தக் காணொளி வழி பகிர்ந்துகொள்ள விரும்பினோம். காணொளியில் வரும் பாட்டியைப் போல ஒருவர் புதிய திறனைக் கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல,'' எனத் தெரிவித்தார் தொடர்பு, தகவல் அமைச்சின் இயக்கங்கள் மற்றும் தயாரிப்புப் பிரிவின் இயக்குநர் சொஃபி ஹரியாந்தி.

தயாரிக்கப்படும் gov.sg காணொளிகள் விறுவிறுப்பாக இருப்பதோடு பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய அம்சங்களையும் கொண்டிருப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

இவ்விரு காணொளிகளையும் இயக்கிய பெருமை உள்ளூர் எழுத்தாளரும் இயக்குநருமான 39 வயது எஸ்.எஸ். விக்னேஸ்வரனைச் சேரும்.

திரைப்பட நடிகர் வடிவேலு நடித்த 'இம்சை அரசன்' தமிழ் திரைப்படம், காலஞ்சென்ற 'காமெடி கிங்' கிரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' மேடைப் படைப்புகள் ஆகியவற்றின் ரசிகரான திரு விக்னேஸ்வரன், அவ்விரு நகைச்சுவை பாணிகளின் கலவையில் ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று யோசித்து காணொளி வசனங்களை எழுதத் தொடங்கினார்.

தத்ரூபமான படப்பிடிப்பு பின்னணியை உருவாக்க, ஒரு வாரம் பிடித்ததென்று இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'ராஜா, ராணி' கரு உருவான பின் படப்பிடிப்புக்குப் பொருத்தமான இடத் தேடலும் நடந்தது.

படப்பிடிப்புகளுக்கு ஏற்ற பழங்கால அரச, மந்திரி உடைகள் இங்கு கிடைக்காத பட்சத்தில் மலே சியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் இரண்டு நாட்களாகப் படப்பிடிப்பு நடந்தது.

சிங்கப்பூரின் வசந்தம் ஒளிவழி பிரபலங்களுடன் மலேசியாவின் 'ஆஸ்ட்ரோ உலகம்', 'ஆர்டிஎம்' ஒளிவழிக் கலைஞர்களும் படப்பிடிப்புக் காட்சிகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது என்றும் காட்சியமைப்பு சிறப்பாக அமைய ஒளிப்பதிவு இயக்குநர் திரு சரவணன் முக்கிய பங்காற்றினார் என்றும் அவர் தெரிவித்தார்.