சோகத்தைப் போக்கிய பரிசு

சோகத்தைப் போக்கிய பரிசு

2 mins read
5988581b-92b7-428d-a885-61ebe044b2eb
தமது வீட்டு வாசலில் கோலமிடப்படுவதைக் கண்டு மகிழும் திருவாட்டி சந்திரா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தீப ஒளியைப்போல் பிரகாசமாக காட்சியளிக்கிறது 63 வயது திருவாட்டி சந்திரா கண்ணா பிச்சைமுத்துவின் இல்லம்.

தீபாவளியை முன்னிட்டு ஜாமியா மறுவாழ்வு இல்லம் அவரின் வீட்டை மாற்றி அமைத்துள்ளது.

தீபாவளி மட்டுமல்லாமல், நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளுக்கு வசதி குறைந்தோரின் வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஜாமியா மறுவாழ்வு இல்லம் 'புரோஜெக்ட் ஹேப்பினஸ்' என்ற பெயரில் திட்டம் ஒன்றை இவ்வாண்டு தொடங்கியது.

ஜாமியா சிங்கப்பூர் எனும் இஸ்லாமிய தொண்டூழிய சமூகநல அமைப்பு நடத்தி வரும் இந்த மறுவாழ்வு இல்லம், முன்னாள் போதைப் புழங்கிகளின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் ஒரு தளம்.

பழைய மின்விசிறி, பழுதடைந்த விளக்கு, சாயம் பூசப்படாத சுவர்கள் என கலையிழந்து போயிருந்தது திருவாட்டி சந்திராவின் வாடகை வீடு.

தமது கணவரை இழந்தபின் இரு பிள்ளைகளை ஒற்றை பெற்றோராக வளர்த்த இவர், 30 ஆண்டுகளுக்குமுன் லெங்கோக் பாருவில் உள்ள தமது மூத்த சகோதரரின் வீட்டில் குடியேறினார்.

துப்புரவாளராக பணிபுரிந்து வந்த இவர், உடல் உபாதைகளால் ஐந்து ஆண்டுகளுக்குமுன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். திருவாட்டி சந்திராவுக்கு நீரிழிவுப் பிரச்சினை உள்ளது.

இவரது சகோதரர் திரு ராஜூ, 69, இதய நோய் பாதிப்பால் அவதியுறுகிறார். இருப்பினும், ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் உதவித் தொகையை வைத்து வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு இவ்வாண்டு பல புதிய வரவுகள் வந்தன.

புதிய மின்விசிறி, அலமாரி, அடுப்பு, சுவர் பளிச்சிடும் வண்ணத்தில் சாயம், தண்ணீரைச் சுடவைக்கும் சாதனம் என வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஜாமியா மறுவாழ்வு இல்லம் திருவாட்டி சந்திராவுக்கு வழங்கியது.

வசதி குறைந்தோர், தகுந்த வசதிகளோடு மகிழ்ச்சியுடன் பண்டிகைக்காலத்தைக் கொண்டாடுவதற்கும் முன்னாள் குற்றவாளிகள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த பங்கை ஆற்றவும் இத்திட்டம் இயங்குவதாக ஜாமியா மறுவாழ்வு இல்லத்தின் தலைவர் முகம்மது பைசால் அபாஸ் குறிப்பிட்டார்.

அந்த வகையில், முன்னாள் குற்றவாளிகள் எழுவர் சேர்ந்து ஒரே வாரத்தில் திருவாட்டி சந்திராவின் வீட்டைப் புதுப்பித்தனர்.

தமது மூத்த மகன் தற்போது நுரையீரல் அழற்சியால் மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை எண்ணி வருந்தும் திருவாட்டி சந்திராவுக்கு ஜாமியா அளித்துள்ள உதவி இவரது சோகத்தைக் குறைத்துள்ளது.

"இந்த வாடகை வீடு களை

யிழந்து காணப்பட்டாலும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியன்று எனது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இப்போது புதுப்பொலிவுடன் காணப்படும் இந்த வீடு எங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

"இதைக் காண எனது குடும்பத்தினரும் நண்பர்களும் இங்கு வருவார்கள்.

"எனது மகன் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் நான் அவனிடம் வீட்டைக் காட்ட ஆர்வத்துடன் உள்ளேன்," என்று ஆனந்தக் கண்ணீருடன் திருவாட்டி சந்திரா கூறினார்.