தீபாவளிப் பாடலுடன் கண்ணனும் ராதையுமாக வேடமிட்ட சிறுவர்கள் இருவர் பலகாரங்கள், பரிசுகளுடன் ஹவ்காங் குடியிருப்பாளர்களை உற்சாகப்படுத்தினர்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் வசதி குறைந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று சிறப்புப் பரிசுகள் வழங்கி வரும் 'சன்லவ்' முதியோர் நடவடிக்கை நிலைய நிர்வாகத்தினர், ஹவ்காங்கில் வசிக்கும் மூன்று குடும்பங்களுக்கு 'என்டியுசி' பற்றுச்சீட்டுகள், தீபாவளிப் பலகாரங்கள், புத்தாடைகள் போன்றவற்றை நேற்று முன்தினம் வழங்கினர்.
கண்ணனும் ராதையுமாக வேடமிட்ட சிறுவர்களுடன் சன்லவ் நிலையத்தின் தலைமை திட்ட அதிகாரி ராஜமோகனும் ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லீ ஹாங் சுவாங்கும் (படத்தில் வடக்கோடி) மூன்று இந்திய குடும்பங்களிடம் இப்பரிசுகளை வழங்கினர். நான்கு குழந்தைகளுடன் தனிமையில் வசிக்கும் திருமதி சண்முகேஸ்வரிக்கு இவ்வாண்டு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைவு. இந்நிலையில், இவர் குடும்பத்தின் முகங்களில் சன்லவ் நிலையம் புன்னகையை மலர வைத்தது. திருமதி சண்முகேஸ்வரியின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கருதி இலவச துணைப்பாட வகுப்புகளை வழங்குவதுடன் ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு உணவுப் பொருட்களையும் சன்லவ் வழங்கி வருகிறது.
தீபாவளிக்கு சன்லவ் வழங்கிய அன்பளிப்பை திருமதி சண்முகேஸ்வரி முதன்முறையாக பெற்றுக்கொண்டார்.
"சன்லவ் நிலையம் ஈராண்டுகளாக என் குடும்பத்திற்கு உதவி வருகிறது. ஆரம்பத்தில் அவர்களை நாட எனக்கு சற்று கூச்சமாக இருந்தாலும் அவர்களது ஆறுதலான பேச்சும் கரிசனமும் எனது கவலைகளைப் போக்கியது," என்றார் இல்லத்தரசியான திருமதி சண்முகேஸ்வரி, 32. இந்த அன்பளிப்பை இரண்டாவது முறையாக பெறும் கிருஷ்ணன் வீரய்யா, அக்னி தேவி தம்பதி, இந்த முயற்சி பல குடும்பங்களுக்கு உதவும் என குறிப்பிட்டனர்.
"ஒருவருக்கு ஒருவர் உதவுவதைப் பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வெவ்வேறு குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்த இந்தியர்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாட இவர்கள் கொடுத்த பரிசுகள் போற்றத்தக்கவை.
"இந்த அன்பளிப்பை எனது கணவருடன் சேர்ந்து பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. வசதி குறைந்த குடும்பங்களுக்கு இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து உதவ முன்வரவேண்டும்," என்றார் இல்லத்தரசியான திருமதி அக்னி தேவி, 67.
தீபாவளியை முன்னிட்டு மூன்றாவது முறையாக வசதி குறைந்தோருக்காக அளிக்கப்பட்ட இந்த அன்பளிப்புகள், இவ்வாண்டு எறத்தாழ 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திரு ராஜமோகன், 59, குறிப்பிட்டார்.
"ஹவ்காங் மட்டுமின்றி மார்சிலிங், யூனோஸ் போன்ற இடங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு இப்பரிசுகளை அளித்துள்ளோம். தீபாவளியன்று இந்தியர்களின் வீடுகளில் விளக்கை ஏற்றி மகிழ்விக்கவேண்டும் என்ற நோக்கில் இம்முயற்சி ஒவ்வோர் ஆண்டும் இடம்பெற்று வருகிறது," என்றார் அவர்.

