தீபாவளி ரகளை: பாதுகாப்பு அதிகாரிக்கு மூத்த அமைச்சர் தர்மன் உட்பட பலர் ஆதரவு

தீபாவளி ரகளை: பாதுகாப்பு அதிகாரிக்கு மூத்த அமைச்சர் தர்மன் உட்பட பலர் ஆதரவு

2 mins read
a5ab1a47-9e7a-4fd4-b5f4-a5fd8521eab4
படம்: பாதுகாப்பு அதிகாரியைச் சாடும் இந்திய ஆடவர். இணையம் -

தீபாவளியை முன்னிட்டு தனது கொண்டோமினிய வீட்டுக்கு வந்த விருந்தினர்கள், தங்கள் கார்களை நிறுத்த $10 வெள்ளி கட்டணம் உண்டு என்று சொன்னதால் அந்த வீட்டு உரிமையாளர் பாதுகாப்பு அதிகாரியைத் தகாத வார்த்தைகள் கூறி சாடியுள்ளார்.

'ரமேஷ்' எனும் அந்த ஆடவர் பாதுகாப்பு அதிகாரியைச் சாடும் காணொளி இணையத்தில் பரவலாக பிரபலம் அடைந்து வருகிறது.

வாம்போ வட்டாரத்தில் உள்ள 'எய்ட் ரிவர்சூட்ச் கொண்டோமினியம்' (Eight Riversuites condominium) தனியார் அடுக்குமாடி வீட்டின் முகப்பில் தீபாவளிக்கு முதல் நாள் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

தமது வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள், அவர்களது காரை நிறுத்த $10 கட்டணம் செலுத்தவேண்டும் என்று இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டோமினிய நிர்வாகத்தின் விதிமுறைகளைத் தெரிவித்தபோது ரமேஷ் எனும் அந்த குடியிருப்பாளர் கோபம் அடைந்தார்.

அவர் " நான் $1.5 மில்லியனுக்கு வீடு வாங்கியிருக்கிறேன் தெரியுமா....நாங்கள் ஒன்னும் வீவக வீட்டில் வசிக்கவில்லை" என்று இடையிடையே தகாத ஆங்கில சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.

திரு ரமேஷின் இந்தச் செயலுக்கு இணையத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அந்த குடியிருப்பாளர் செய்தது பல நிலைகளில் தவறு என்று தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது போன்ற நவீன உலகில் காட்டப்படும் பாரபட்சத்தையும் 'இது தன்னுடையது' என வெளிக்காட்டும் தன்மையையும்தான் இந்தத் தீபாவளி பண்டிகை போக்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

மேலு இச்சம்பவத்தை அமைதியான மரியாதையான முறையில் சமாளித்த பாதுகாப்பு அதிகாரியையும் திரு தர்மன் பாராட்டினார். அத்துடன் அந்த குடியிருப்பாளரை மக்கள் மிரட்டுவதோ, தொல்லை கொடுப்பதோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து போலிஸ் புகார் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறினார். இதற்கிடையே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆதரவக பாதுகாப்பு அதிகாரிகள்சங்கம் குரல் கொடுத்துள்ளது.