தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பில் இரு வேறு தீச் சம்பவங்கள் நேற்று ஏற்பட்டன.
பிடோக் நார்த் அவென்யூ 4, புளோக் 106ன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் காலை 11.15 மணியளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
பெரும்பாலும் சமையலறையில் உள்ள பொருட்கள் தீக்கு இரையானதாகவும் தீயை அணைப்பதற்கு அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. அவ்வீட்டில் வசித்த ஓர் ஆடவர், புகையைச் சுவாசித்ததால் பாதிப்புற்று சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் வருவதற்கு முன்னர் புளோக்கின் கிட்டத்தட்ட 40 குடியிருப்பாளர்கள், பாதுகாப்புக்காக தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு, கேலாங் லோரோங் 19ல் உள்ள ஒரு மின்-ஸ்கூட்டர் கடையில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. கடையில் இருந்த ஒரு கிடங்கறையில் இருந்த பொருட்கள் தீக்கு இரையாகியதாகவும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனம் ஒன்றைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. கடையின் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மின்னூட்டம் செய்யப்பட்ட சமயத்தில் தீச்சம்பவங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

