தன் தாயார் உட்பட இரு மாதர்களைக் கொலை செய்ததன் தொடர்பில் 22 வயது கேப்ரியல் லியன் கோ மீது நேற்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. காமன்வெல்த் பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 7.24 மணியளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
கோவின் தாயார் என்று நம்பப்படும் 56 வயது லீ சோ முய், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்றும் மற்றொருவர் 90 வயது மூதாட்டி என்றும் கூறப்படுகிறது. காமன்வெல்த் அவென்யூ, புளோக் 7Aயில் உள்ள ஏழாவது மாடியின் ஒரு வீட்டில் மூதாட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கோவின் பாட்டி என்று நம்பப்படுகிறது.
தொடக்கத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்று கூறப்பட்ட இரு மாதர்களின் மரணமும் இப்போது கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தாயாரைக் கொலை செய்ததன் தொடர்பில் தற்போது கோவின் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு மனநோய் மதிப்பீட்டுக்காக அனுப்பப்படும் கோ, மீண்டும் நவம்பர் 18ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
நீதிமன்றத்தில் நேற்று முகத்திலும் கைகளிலும் காயங்களுடன் கோ காணப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு கிட்டத்தட்ட 7 மணியளவில் சம்பவம் நடந்த வீவக கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ஒரே ஆரவாரமாக இருந்ததாக அக்கம்பக்கத்தார் கூறினர். பிரார்த்தனைக்காகச் சென்றுகொண்டிருந்த ஒரு கூட்டத்தின் முன்னால் காலணியில்லாமல் நடந்து சென்ற கோ, திடீரென்று திரும்பி அக்கூட்டத்தினரைச் சண்டைக்கு இழுப்பது போன்று நின்றதாக அங்கிருந்தவர்களில் ஒருவரான திரு லாம் தெரிவித்தார்.
முரட்டுத்தனமாக அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்த கோவை, அமைதிப்படுத்த திரு லாம் முயற்சி செய்தபோது கோ வன்முறையில் இறங்கியதாகவும் கோவின் வலது கையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் கூறப்பட்டது.
திரு லாமை நோக்கி, "அரசாங்கத்தை என்னிடம் வந்து பேசச் சொல்," என்று கோ கூறியதாக இன்னொரு வழிப்போக்கர் கூறினார்.
திரு லாமை கோ குத்தியதும் அங்கிருந்த பலரும் ஒன்றுசேர்ந்து கோவைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களையும் கோ தாக்கியதாகவும் போலிஸ் வரும்வரை நால்வர் கோவை இறுகப் பிடித்துத் தடுத்து வைத்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.

