தனது கணவர் என்று நம்பப்படும் 63 வயது ஆடவரைக் கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் 54 வயது வாங் ஷுஸென் மீது நேற்று நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டது.
அங் மோ கியோ அவென்யூ 6, புளோக் 633ல் உள்ள ஒரு வீட்டில் இயற்கைக்கு மாறான மரணம் நடந்திருப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.46 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
கூறப்பட்ட வீட்டில் 63 வயது டே ஹோக் பைன் என்பவர் மாண்டு கிடந்தார். மருத்துவ அதிகாரிகள் அவரது மரணத்தை உறுதிசெய்தனர்.
காலை ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் திரு டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சீன நாட்டவரான வாங்கும் கொலை செய்யப்பட்ட டேயும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் கணவன், மனைவி என்று இப்போது கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளன்று காலை 5 மணியளவில் மூன்றாவது மாடியில் உள்ள தம்பதியின் வீட்டிலிருந்து ஒருவகை தட்டும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக ஓர் அண்டைவீட்டுக்காரர் கூறினார்.
வீட்டின் வெளியே ரத்தக் கறையுடன் கால்தடங்கள் காணப்பட்டன.
தம்பதி அவ்வீட்டில் கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக வசித்து வருவதாக அண்டைவீட்டார் பகிர்ந்துகொண்டனர்.
அத்தம்பதி அடிக்கடி அருகில் உள்ள உணவங்காடி நிலையத்திற்கு ஒன்றாகச் செல்வதுடன் குழந்தை வண்டியில் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு குடியிருப்பு வட்டாரத்தை வலம் வருவர் என்றும் கூறப்பட்டது. வேலைக்குச் செல்லும் ஒரு மகளும் அத்தம்பதிக்கு உள்ளதாக அண்டைவீட்டார் கூறினர்.

