'டெலிகிராம்' செயலி மூலம் ஆபாசப் படங்களைப் பகிர்ந்த லியோங் தியன்வெய், 37, மீது நேற்று கூடுதலாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இவரும் ஒருவர்.
மின்னிலக்க ரீதியாக ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக லியோங் மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இவ்வாண்டு ஜூன், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டு தருணங்களில் டெலிகிராம் செயலியின் 'எஸ்ஜி நாசி லெமாக்' எனும் உரையாடல் குழு மூலம் லியோங் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
லியோங்கிற்கு $15,000 பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டில்லா சபருதீன், 17, ஜஸ்டின் லீ ஹான் ஷி, 19, லெனர்ட் டியோ மின் ஸுவான், 26, ஆகியோர் மற்ற மூவர் மீதும் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
லியோங் உட்பட அந்த நால்வரும் இம்மாதம் 15ஆம் தேதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்டில்லா, லீ, டியோ ஆகியோர் தலா இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.அவர்களில் அப்டில்லாவுக்கும் லீக்கும் தலா $5,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால், டியோவுக்கு பிணை வழங்கப்படவில்லை. அடுத்த மாதம் 5ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

