தொலைக்காட்சிப் பெட்டியைக் கீழே வீசியதாக மாது கைது

தொலைக்காட்சிப் பெட்டியைக் கீழே வீசியதாக மாது கைது

1 mins read
309f12e0-afd0-48ba-907d-94f9e3b616e1
நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இந்த பாசிர் ரிஸ் கொண்டோமினியத்தில் சம்பவம் நடந்தது. படம்: ஷின் மின் -

பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள கொண்டோமினியத்தின் 10வது மாடியிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை நேற்று முன்தினம் கீழே வீசியதாகக் கூறி 31 வயது மாது ஒருவரை போலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அந்த மாது போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொண்டோமினியத்தில் வசிக்கும் குழந்தை ஒன்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது. கைது செய்யப்பட்ட மாதின் குழந்தை அது என அறியப்படுகிறது. எண் 6 பாசிர் ரிஸ் லிங்கில் உள்ள இந்த கொண்டோமினியத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.

குடும்பத்துடன் தமது வீட்டில் உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதாக இந்த கொண்டோமினியத்தில் வசிக்கும் குடியிருப்பாளரான திரு ஃபிராங், 43, கூறினார்.

"கீழ்த்தளத்தில் உள்ள பொதுப் பாதையில் 50 அங்குலம் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று விழுந்து கிடந்தது. நல்லவேளையாக, அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாகச் செல்லவில்லை," என்றார் அவர்.

2016ஆம் ஆண்டிற்கும் கடந்த ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், உயரத்திலிருந்து கீழே பொருள் வீசுவதன் தொடர்பில் 7,700க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 2,300 முதல் 2,800 வரையிலான சம்பவங்கள் பதிவாகின.