மரியாதையுடன் நடக்க 'ஜேபி மோர்கன்' ஊழியர்களுக்கு நினைவூட்டு

மரியாதையுடன் நடக்க 'ஜேபி மோர்கன்' ஊழியர்களுக்கு நினைவூட்டு

2 mins read

வாம்போவில் உள்ள கொண்டோமினியத்தில் பாதுகாவலரிடம் குடி யிருப்பாளர் ஒருவர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து ஆத்திரத் துடன் நடந்துகொண்ட காணொளி விவகாரத்தில் அந்த குடியிருப்பாளர் வேலை பார்க்கும் ஜேபி மோர்கன் சுற்று அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.

தமது ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பிய சுற்று அறிக்கையில் சிங்கப்பூரைத் தள மாகக் கொண்டு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மரியாதையுடன் நடக்கும் கலாசாரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஜேபி மோர்கன் வலியுறுத்தியுள்ளது.

"நமது மக்கள், நமது சேவை, நம்பகத்தன்மை ஆகியவை ஜேபி மோர்கனை உலக அளவில் நன்மதிப்புமிக்க நிறுவனமாக உயர்த்தி உள்ளது.

"இந்த நன்மதிப்பைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நமது ஊழியர்கள் அனைவருக்கும் உண்டு," என்று சுற்றறிக்கையில் ஜேபி மோர்கனின் சிங்கப்பூருக்கான மூத்த அதிகாரி எட்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

இந்த சுற்று அறிக்கை எதற்காக அனுப்பப்பட்டது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூரில் பலரை அதிர்ச்சி அடைய வைத்த காணொளி பற்றியும் அதில் சுட்டிக் காட்டப்படவில்லை. ஆனால் வேலையிடத்திலும் வெளியிடங்களிலும் மரியாதையுடனும் மற்றவர்களிடம் கண்ணியத்துடனும் ஊழியர்கள் நடந்து கொள்வதை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

சிங்கப்பூரர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் சிங்கப்பூரின் 'ஜேபி மோர்கன்' நிறுவனம் திரு லீயின் தலைமையில் செயல்படுகிறது.

ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டபோது மின் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட சுற்று அறிக்கையை அந்நிறுவனம் உறுதி செய்தது. காணொளி விவகாரத்தை கவனித்து வருவதாகக் கூறிய அது, சம்பந்தப்பட்ட ஊழியர் பற்றி மேல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய காணொளி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை வாம்போவில் உள்ள கொண்டோமினியத்தில் நடைபெற்றது.

குடியிருப்பாளர் ஒருவர் தீபாவளிக்கு விருந்தினர்களை அழைத்து வந்தபோது விருந்தினர்களின் காரை நிறுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்குள்ள பாதுகாவலர் ஒருவர் கூறியதால் பிரச்சினை வெடித்தது.

அந்த குடியிருப்பாளர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து சத்தம் போட்டுக் கத்தினாலும் பாதுகாவலர் அமைதியைக் கடைப்பிடித்து சூழ்நிலையைச் சமாளித்தார்.

அதே நாளில் யுடியூப்பில் பதிவேற்றப்பட்ட அந்த காணொளி சூடான விவாதங்களையும் விமர் சனங்களையும் கிளப்பியது.

பாதுகாவலர் தன்னுடைய கடமையை ஆற்றுவதாகக் கூறியும் குடியிருப்பாளர் சத்தம் போட்டது குறித்து பலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். "இது ஒன்றும் வீவக வீடு அல்ல. ஒன்றரை மில்லியன் வெள்ளி போட்டு கொண்டோமினிய வீட்டை வாங்கியிருக்கிறேன்," என்றும் குடியிருப்பாளர் சத்தம் போட்டார். இந்த நிலையில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தொழிலாளர் எம்பி சைனல் சபாரி மற்றும் பாதுகாவலர் சங்கங்கள் அந்த கொண்டோமினிய பாதுகாவலருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.