இனம், சமயம் குறித்து உயர் விழிப்புணர்வு

இனம், சமயம் குறித்து உயர் விழிப்புணர்வு

3 mins read

பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் இனம், சமயம் தொடர்பான விவகாரங்களின் தீவிரத்தை அறிந்திருக்கிறார்கள். மேலும் இந்த விரிசல்களைக் கையாள அரசாங்கம் போதுமான அளவு செய்துள்ளதாக உணர்கிறார்கள்.

ஆனால், வர்க்கம், குடியேற்றம், ஓரினப் புணர்ச்சியாளர்கள், இருபால் உறவுகொள்வோர், திருநங்கைகள் (எல்ஜிபிடி) ஆகியோருக்கான உரிமைகள் ஆகியவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் கூடுதலான அரசு தலையீட்டையும் பொதுவெளியில் விவாதத்தையும் அதிகமான சிங்கப்பூரர்கள், குறிப்பாக இளையர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இனம், சமயம் ஆகியவற்றுடன் ஒப்பிட இதுபோன்ற பிரச்சினைகளும் தவறாகக் கையாளப்பட்டால் ​​சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை அதிகம் பாதிக்கும்.

சிங்கப்பூரில் உள்ள விரிசல்கள் குறித்து கொள்கை ஆய்வுக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டு சுமார் 4,000 சிங்கப்பூர் குடிமக்கள் நிரந்தரவாசிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனம், சமயம் ஆகியவை சிங்கப்பூரில் முறையாகக் கையாளப்படாவிட்டால், அவை வன்முறையை விளைவிக்கும் சாத்தியம் உள்ளவை என்று குறிப்பிட்டனர். வர்க்கம், குடியேற்றம், எல்ஜிபிடி விவகாரங்களைவிட, இனம், சமயம் தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர்.

வர்க்கம், குடியேற்றம் தொடர்பான விவகாரங்கள் தவறாக கையாளப்பட்டால் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையக்கூடும் என்று கூறிய கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது, ​​கால்வாசி பேரே அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையுடன் இனம், சமயம் தொடர்பான விவகாரங்களை இணைத்துள்ளனர்.

வர்க்க வேறுபாடுகள், குடியேற்றப் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கம் அதிக பொறுப்பேற்க வேண்டும் என்று குடிமக்கள் எதிர்பார்ப்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இனப் பதற்றங்களையும் வகுப்புவாத அரசியலைச் சமாளிக்க வேண்டிய சுதந்திரத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இது மாறுபட்டது.

கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் மாத்யூ மாத்யூஸ், இணை ஆய்வாளர் மெல்வின் டே, ஆய்வு உதவியாளர் சாந்தினி செல்வராஜன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களில் ஐந்தில் ஒருவர் இனம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்க ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றனர். ஒப்பிட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் அரசாங்க ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றனர். சமயம் தொடர்பான விவகாரங்களில் இதே போக்கைக் காண முடிகிறது.

1950ல் நடந்த மரியா ஹெர்டோக் பிரச்சினை, 1964 இனக் கலவரம் போன்றவற்றை அனுபவித்துள்ளதால் மூத்த தலைமுறையினரிடம் இப்போக்கைக் காண முடியும் என ஆய்வாளர்கள் கூறினர்.

சீனர்களுடன் (24%) ஒப்பிட, அதிகமான மலாய்க்காரர்களும் இந்தியர்களும் (கிட்டத்தட்ட 40%) இனம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்க ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றனர்.

பெரும்பான்மையினரைவிட, சிறுபான்மையினர் பாகுபாட்டை உணர அல்லது அனுபவிக்கக் கூடும் என்பதன் அடையாளம் இது. சமயம் தொடர்பிலும் இதேபோக்கைக் காணமுடிகிறது என ஆய்வாளர்கள் கூறினர்.

இந்தத் துறைகளில் கடுமையான சட்டங்கள் தேவை என்று 61% மலாய்க்காரர்களும் 55% இந்தியர்களும் கூறியுள்ளனர். சீனர்களில் 46 விழுக்காட்டினரே கடுமையான சட்டம் தேவை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறைந்த கல்வியறிவைப் பெற்ற சிறுபான்மையினரைவிட, பல்கலைக்கழக பட்டக்கல்வி, அதற்கும் மேலான கல்வியைப் பெற்ற சிறுபான்மையினர் அரசாங்கத் தலையீட்டை விரும்புகின்றனர். இது, அதிகமான படிப்பு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இன, சமய விவகாரங் களுக்குத் தீர்வுகாண விரும்புவதையும் ஆய்வு காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

இனவேறுபாடு காட்டப்படுவதன் சாத்தியம் குறித்து விசாரிப்பதில் சிறுபான்மையினரும் இளையர்களும் அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட இனத்தை அல்லது சமயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சேவை வழங்க நிறுவனம் ஒன்று மறுப்பதாக மின் அஞ்சல் வந்தால் அந்த விவகாரத்தை விசாரிக்க விரும்புவதாக ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட மலாய்காரர்களும் இந்தியர்களும் தெரிவித்துள்ளனர். சீனர்களிடம் இந்த விழுக்காடு 37ஆக உள்ளது.

மேலும் முப்பது விழுக்காடு மலாய் மற்றும் இந்தியர்கள் அந்த குற்றச்சாட்டை உரிய அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது சீனர்களிடம் 13 விழுக்காடாக உள்ளது. இளம் சிங்கப்பூரர்கள் இத்தகைய தகவல்களின் மூலத்தை கண்டறிய விரும்புகின்றனர். அவர்களில் இரண்டில் ஒரு பங்கினர் மின் அஞ்சல் அனுப்பிய நண்பரிடம் உண்மையைக் கேட்டறிய விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆனால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதி பேர் மட்டுமே அவ்வாறு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 92 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்துள்ளதாக நம்புகின்றனர்.