சில துறைகளில் மேலும் வேலைக்குறைப்பு: சிங்கப்பூர் நாணய ஆணையம்

சில துறைகளில் மேலும் வேலைக்குறைப்பு: சிங்கப்பூர் நாணய ஆணையம்

2 mins read
117b18f0-afb0-4023-adc2-34460fce4024
-

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் சம்பள உயர்வு தணியும் என எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியிருக்கிறது. அதோடு, வேலை இல்லாதவர்களைவிட வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

வர்த்தகம் சார்ந்த குழுமத்தில், குறிப்பாக மின்னணு மற்றும் நுண்பொறியியல் தொழில்துறைகளிலும், மொத்த விற்பனை வர்த்தகத் துறையிலும் ஆட்குறைப்பு தொடரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஆணையம் தனது பொறியியல் மறுஆய்வு அறிக்கையில் புதன்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்தது. இவ்வாண்டின் முதல் பாதியில் நேர்ந்த ஆட்குறைப்பில் பெரும்பகுதி மின்னணு உற்பத்தித் துறையிலும் மொத்த விற்பனை வர்த்தகத் துறையிலும் நடந்ததாகவும் ஆணையம் கூறியது.

ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2017 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக, வேலை இல்லாதோரின் எண்ணிக்கையைவிட வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. அதோடு, ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் மறுவேலையில் சேரும் விகிதமும் குறைந்திருக்கிறது. ஆட்சேர்ப்பில் முதலாளிகள் கவனமாக இருந்தாலும், தற்போதைய தொழிலாளர்களைத் தக்க வைப்பதாக ஆணையம் கூறியது. சம்பளச் செலவுகளைக் குறைக்க வாரத்தில் குறைவான நாட்கள் வேலை செய்யும் ஏற்பாட்டை அல்லது தற்காலிக வேலை நீக்கத்தை முதலாளிகள் கையாளுகின்றனர்.

எதிர்வரும் காலத்தில் பொருளியல் பின்னடைவால் எல்லா தொழில்துறைகளிலும் ஆட்சேர்ப்பு மந்தமடையும் என்றும், வர்த்தகம் சார்ந்த குழுமத்தில் ஆட்குறைப்பு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவு மோசமடையாதிருந்தால், நவீன சேவைக் குழுமத்தில் வேலைகளின் உருவாக்கம் தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும் சம்பள உயர்வு தணியும் என ஆணையம் குறிப்பிட்டது. "லாபகத்தன்மை குறைந்து வருவதாலும், தொழிலாளர் சந்தை நலிவடைவதாலும் சம்பள உயர்வின் வேகமும் குறையும், குறிப்பாக அதிக நீக்குப்போக்கான சம்பள ஏற்பாடுகள் உள்ள நிறுவனங்களில்," என்றது ஆணையம்.