கடற்துறைக்கு உந்துதல் அளிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிக இன்றியமையாதது என்று நேற்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறினார்.
கரையோரப் பூந்தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத் துலக கடற்துறை மன்றத்தின் வருடாந்திர மாநாட்டில் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் 'digitalPORT@SG' தளத்தைத் தொடங்கி வைத்தபோது இவ்வாறு பேசினார்.
கடற்துறை தொடர்பான பரிவர்த்தனைகளுக்குத் தேவையான அனுமதியை இத்தளம் வழங்கும்.
ஆணையம் உட்பட குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம், தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆகியவற்றின் தேவைக்கு ஏற்ப பரிவர்த்தனைகளுக்கான அறிக்கைகளைத் தயாரிக்கும் செயல்முறை இனி எளிதாக்கப்படும்.
துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களுக்கும் சரி துறைமுகத்திலிருந்து கிளம்பும் கப்பல்களுக்கும் சரி, இத்தளம் பெரிதும் கைகொடுக்கும்.
வரும் டிசம்பர் மாதம் முதல் இத்தளம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் இதனால் துறையில் இருக்கும் ஊழியர்களின் 100,000 மணிநேரம் மிச்சமாகும் என்றும் நிதி அமைச்சராகவும் உள்ள திரு ஹெங் குறிப்பிட்டார்.
"உலக அரங்கில் சிங்கப்பூர் முக்கியமானதாகத் திகழ நாட்டின் கடற்துறை பங்காற்றியுள்ளது. அத்துடன் நாட்டு பொருளியலுக்கும் கடற்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் கடற்துறையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடற்துறை சமூகம் மேம்பட நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்," என்றார் அமைச்சர் ஹெங்.
சிங்கப்பூரின் எல்லைகளைத் தாண்டியும் இத்தளத்தை இயங்கச் செய்யத் திட்டம் உள்ளதாகப் பகிர்ந்துகொண்ட திரு ஹெங், கடற்துறையினர் மேலும் சிறப்பான முறையில் இயங்க இது உதவும் என்றார்.

