வரும் டிசம்பர் 2ஆம் தேதிமுதல் சிங்போஸ்ட் நிறுவனம் செய்யவுள்ள மாற்றங்களில் வீடுவரை சென்று விநியோகம் செய்யும் சேவை நிறுத்தப்பட உள்ளது. அத்துடன் குறைந்த அஞ்சல் கட்டணத்தில் சிங்கப்பூருக்குள்ளேயே சிறிய பொட்டலங்களை அனுப்பி வருவோர், இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இணைய வர்த்தக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க அஞ்சல் சேவை வழங்கிவரும் சிங்போஸ்ட், அதன் சேவைகளுக்கான கட்டணத்தில் இம்மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி சாதாரண அஞ்சல் பிரிவுக்குப் பதிலாக அடிப்படை அஞ்சல் பிரிவு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் 500 கிராம் வரை எடையுள்ள கடிதங்களும் அச்சிடப்பட்ட தாட்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான அஞ்சல் கட்டணம், எடையையும் அளவையும் பொறுத்து 30 காசு முதல் $1.70 வரை கணக்கிடப்படும். தற்போது 501 கிராமுக்கும் 2 கிலோவுக்கும் இடைப்பட்ட எடை கொண்ட பொட்டலங்களை உள்நாட்டிலேயே அனுப்ப $3.35 வரை கட்ட வேண்டியுள்ளது.
இனி அக்கட்டணம் $3.50 வரை உயரும். ஆனால் பொட்டலம் விநியோகம் செய்யப்படும் வரை அதன் முழு விவரங்கள் குறித்துப் பெறுநருக்குத் தகவல் கிடைக்க வேண்டுமானால் பொட்டலத்தின் எடையைப் பொறுத்து $3.20 முதல் $4.80 வரை கட்ட வேண்டிவரும். இதற்கிடையே வெளிநாட்டு அஞ்சல் நிறுவனங்கள், சிங்போஸ்ட் நிறுவனத்திற்கு விதிக்கும் கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு அஞ்சல் கட்டணத்தை சிங்போஸ்ட் உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

