தான் வசிக்கும் கூட்டுரிமை வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் அவர்களின் காரை நிறுத்தக் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டவுடன், குடியிருப்பாளர் ஒருவர் தன் கோபத்தைப் பாதுகாவல் அதிகாரியிடம் வெளிப்படுத்திய சம்பவம் தொடர்பில் இப்போது அக்குடியிருப்பாளரே போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கத் தகவல்களை, இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து வெளியிடப்பட்டதன் தொடர்பில் அப்புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் அவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக இவ்வாண்டு மே மாதம் முதல் 'போஹா' எனப்படும் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அத்திருத்தச் சட்டத்தின்படி மாற்றங்கள் நடப்புக்கு வந்துவிட்டதா என்பது குறித்துத் தெளிவு இல்லை. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பாதுகாவல் அதிகாரியும் போலிசில் புகார் அளித்துள்ளார்.

