வீவக: 6,000 புதிய மின்னிலக்க காட்சித் திரைகள்

வீவக: 6,000 புதிய மின்னிலக்க காட்சித் திரைகள்

1 mins read
e2a86b35-6943-46d4-bd21-fddcb8f10dc0
-

மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் அறிவார்ந்த தேசமாகும் முயற்சியில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மேலும் 6,000 புதிய மின்னிலக்க காட்சித் திரைகளைக் குடியிருப்புப் பேட்டைகளில் பொருத்தவுள்ளது.

மின்தூக்கிகளிலும் மின்தூக்கிக்காக காத்திருக்கும் இடங்களிலும் பொருத்தப்படவுள்ள இக்காட்சித் திரைகள் மூலம் குடியிருப்பாளர்கள் தகவல்களையும் செய்திகளையும் படித்து அறிந்துகொள்ளலாம்.

குடியிருப்பு வட்டாரங்களில் அடுத்தாண்டு முதல் மின்னிலக்க காட்சித் திரைகளை வீவக பொருத்த உள்ளது.

சுவர்களில் அமைந்துள்ள அறிவிப்புப் பலகைகளில் தகவல் அளிப்பதற்குக் குறைவான இடவசதியே உள்ளது. அத்துடன் அறிவிப்புகள் உடனுக்குடன் மாற்றப்படாமல் பழையத் தகவலாகவும் ஆகிவிடுகிறது. இனி இந்த அறிவிப்புப் பலகைகளுடன் புதிய மின்னிலக்க காட்சித் திரைகளும் இணைந்து தகவல் அளிப்பதில் பங்காற்றும் என்றது வீவக.

முதல் மாடியில் மின்தூக்கிக்காக காத்திருக்கும் இடத்திலும் சில குடியிருப்பு மின்தூக்கிகளிலும் இக்காட்சித் திரைகள் பொருத்தப்படும்.

அரசு அமைப்புகள், சமூக அமைப்புகள், விளம்பர நிறுவனங்கள் ஆகியவற்றின் செய்திகளும் தகவல்களும் காட்சித் திரையில் சுருளாகக் காட்டப்படும். குடியிருப்பு வட்டாரத்தின் நிகழ்வுகள் முதல் தேசிய அளவிலான அபாயநிலை குறிப்புகளும் இடம்பெறும்.

ஏற்கெனவே 8,700 மின்னிலக்க காட்சித் திரைகளை வீவக கட்டடங்களின் பொது இடங்களில் சில நகர மன்றங்கள் பொருத்தியுள்ளன.