'மந்தநிலையில் வளர்ச்சி; ஆட்குறைப்பு தொடரலாம்'

'மந்தநிலையில் வளர்ச்சி; ஆட்குறைப்பு தொடரலாம்'

2 mins read

அடுத்த 18 மாதங்களுக்கு மந்தநிலை தென்படுவதால் அடுத்த ஆண்டிலும் சிங்கப்பூரின் பொருளியல் தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கக்கூடும் என சிங்கப்பூர் நாணய ஆணயம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் தொடர்பான பிரிவில் 'குறிப்பிடத்தக்க அளவிலான நிச்சயமற்ற தன்மையுடன்' வளர்ச்சி சீரற்று இருக்கும் என்றும் மத்திய வங்கி ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் அதன் பொருளியல் மறுஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் அனைத்துலக அளவிலான வளர்ச்சி நிலைத்தன்மையை எட்டினால் தொழில்நுட்ப மந்த நிலை, முழு ஆண்டு மந்தநிலை ஆகியவற்றிலிருந்து நாடு தப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஊதிய வளர்ச்சி அடுத்த ஆண்டும் மெதுவடையும் என்று ஆணயம் தெரிவித்துள்ளது. காலியாக இருக்கும் வேலைகளின் எண்ணிக்கை வேலையின்றி இருப்போரின் எண்ணிக்கையைவிட குறைவாக இருப்பதாகவும் வேலைக்கு ஆளெடுப்பதில் எச்சரிக்கையான போக்கு நிலவுவதாகவும் அதன் அறிக்கை தெரிவித்தது.

வர்த்தகம் தொடர்பிலான பிரிவில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது. உற்பத்தித் துறையில் குறிப்பாக, மின்னணுவியல் மற்றும் துல்லியப் பொறியியல் துறைகளிலும் மொத்த விற்பனைத் துறையிலும் ஆட்குறைப்பு இருக்கலாம் என நேற்று வெளியான பொருளியல் ஆய்வறிக்கையில் மத்திய வங்கி குறிப்பிட்டது.

நீடிக்கும் வர்த்தக சச்சரவுகள், அனைத்துலக அளவிலான மின்னணுவியல் சுழற்சியில் காணப்படும் தளர்வு ஆகியவற்றுக்கிடையே இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இவ்வாண்டின் முதல் பாதியில் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தி, மொத்த வர்த்தகம் ஆகிய துறைகளில் ஆட்குறைப்பு அதிகம் இருந்ததாக ஆணையம் தெரிவித்தது.

வேலைச்சந்தை சுழற்சி, கட்டமைப்பு அடிப்படையிலானது என்றும் வர்த்தகக் கட்டமைப்பை மாற்றியமைத்தல், மின்னிலக்கமயமாதல் போன்றவை வேலைச்சந்தை மெதுவடையக் காரணமாக இருக்கும் என்றும் ஓசிபிசி வங்கியின் கருவூல ஆய்வு மற்றும் உத்திபூர்வத் துறையின் தலைவர் செலினா லிங் கூறியுள்ளார்.

வேலையின்மை விகிதம் அதிகரித்து வரும் வேளையில் உற்பத்தித் துறை தவிர மற்ற துறைகளிலும் ஆட்குறைப்பு அதிகரித்தால் அது மிகவும் அக்கறைக்குரியது என்றார் அவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போது முதன்முறையாக, காலியாக இருக்கும் வேலைகளின் எண்ணிக்கை வேலையின்றி இருப்போரைவிட குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆணையம், ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் பணியில் சேரும் விகிதமும் குறைந்துள்ளது என்றது.

வேலைக்கு ஆளெடுப்பதில் எச்சரிக்கையான போக்கு நிலவினாலும் நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேலை நாட்களைக் குறைப்பது, தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவுகளைக் குறைத்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.

வலுவற்ற உற்பத்தித்திறன் வளர்ச்சியாலேயே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மெதுவடைந்தது என்றும் வேலைக்குறைப்பினால் இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.

வர்த்தக நிலவரம் மேலும் மோசமடையாவிட்டால், நவீன சேவைகள் துறையில் வேலை உருவாக்கம் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான நடவடிக்கைகளால் அது சார்ந்த துறைகளிலும் ஊழியர் நியமனம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.