சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உட்பட உலகெங்கும் பல கல்வி நிலையங்களின் கல்வி ஆய்வு தொடர்பான தகவல்களை 'ஃபிஷிங் அட்டாக்' எனப்படும் இணையத் தாக்குதல் முறை மூலம் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி இடம்பெற்ற அந்த இணையவழித் தாக்குதலில் பல்கலைக்கழகத்தின் இந்நாள், முன்னாள் மாணவர்களின் கணக்குகள் குறிவைக்கப்பட்டன. அந்தத் தாக்குதலால் ஏற்பட வாய்ப்புள்ள தாக்கத்தை மதிப்பிடும் வகையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று அதன் பேச்சாளர் தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.
"இதுவரை எந்த ஒரு பயனரின் கணக்கும் பாதிக்கப்படவில்லை; எந்தத் தரவும் கசிந்ததாக கண்டறியப்படவில்லை," என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தகைய மோசடி மின்னஞ்சல்களில் காணப்படும் இணைப்புகளைச் சொடுக்கவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என்று முன்னாள் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஆங் லியோங் பூன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் இரு வாரங்களுக்குமுன் அறிவுறுத்தப்பட்டனர். அண்மைய 'ஃபிஷிங்' தாக்குதல் முயற்சியில், தங்களுக்கான நூலக சேவை அனுமதி விரைவில் முடியப்போவதாக பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

