சுற்றுப்பயணிகள் வருகை கூடியது; செலவிட்ட தொகை குறைந்தது

சுற்றுப்பயணிகள் வருகை கூடியது; செலவிட்ட தொகை குறைந்தது

1 mins read
05fa4ecd-4bfd-4aec-a15f-d40930be0dc4
-

இவ்வாண்டின் முற்பாதியில் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1.3% கூடி, 9.3 மில்லியனாக அதிகரித்தது. அதே நேரத்தில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்புநோக்க, அவர்கள் செலவிட்ட தொகை 3% சரிந்து $13.1 பில்லியன் ஆகக் குறைந்தது.

தங்குமிடத்திற்கு 13 விழுக்காடும் உணவு, பானத்திற்கு 5 விழுக்காடும் சுற்றிப் பார்த்தல், பொழுதுபோக்கு, விளையாட்டிற்கு 2 விழுக்காடும் அவர்கள் குறைவாகச் செலவிட்டனர் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் 2% கூடுதலாக, அதாவது $2.8 பில்லியன் செலவிட்டனர் என்பது சில்லறை வர்த்தகர்களுக்கு நல்ல செய்தி.

சீனா, இந்தோனீசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகமான சுற்றுப்பயணிகள் வந்துள்ளனர். அதே நேரத்தில், சீனப் பயணிகள் 5 விழுக்காடும் இந்தியப் பயணிகள் 12 விழுக்காடும் குறைவாகச் செலவு செய்தனர்.

சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை, செலவிட்ட தொகை ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தில் அமெரிக்கர்களே முதலிடம் பிடித்தனர். இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 361,000 அமெரிக்கர்கள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தனர். அவர்கள் $407 மில்லியன் பணத்தைச் செலவிட்டனர். இது, கடந்த ஆண்டின் முற்பாதியை ஒப்பிட 11% அதிகம். இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 12.9 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்ததாகவும் ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்க இது ஏறக்குறைய 2% அதிகம் என்றும் பயணத்துறைக் கழகத்தின் மின்னிலக்க உருமாற்றத்திற்கான இயக்குநர் போ சி சுவான் தெரிவித்தார்.