சிங்கப்பூர் - மலேசியா இடையே இயக்கப்படும் விமான சேவைகளால் ஈட்டப்படும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
அதேபோல, ஒரு நிறுவனத்தின் விமான சேவையை இன்னொரு நிறுவனம் தனது விமான சேவை அட்டவணையில் பட்டியலிடும் 'கோட்-ஷேர்' ஏற்பாட்டை விரிவுபடுத்தவும் அவ்விரு விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் முடிவுசெய்துள்ளன.
இப்போதைக்கு, சிங்கப்பூருக்கும் கோலாலம்பூர், கோத்தா கினபாலு, கூச்சிங், பினாங்கு ஆகிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இரு நிறுவனங்களின் விமானங்களுக்கு 'கோட்-ஷேர்' முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
புதிய உடன்பாட்டின்படி, சில்க்ஏர், ஸ்கூட் ஆகிய சிங்கப்பூர் ஏர்லைன்சின் துணை நிறுவனங்களின் விமானங்களும் மலேசிய ஏர்லைன்சின் துணை நிறுவனமான 'ஃபயர்ஃபிளை' விமானங்களும் 'கோட்-ஷேர்' முறையின்கீழ் இடம்பெறும்.
"வாடிக்கையாளர்களுக்கு அதிகமான விமானத் தெரிவுகளை வழங்க ஏதுவாக விமான அட்டவணையில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளோம்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்சும் மலேசிய ஏர்லைன்சும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்து உள்ளன.

