தவ்வு தொழிற்சாலையில் கரப்பான்பூச்சிகளும் சிலந்திகளும்: உரிமையாளருக்கு அபராதம்

2 mins read
3063f662-abfb-4574-9456-da03e5c64c6f
-

தவ்வு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏகப்பட்ட கரப்பான்பூச்சிகளும், அங்கிருந்த இயந்திரக் கருவிகளில் சிலந்திகளும் மொய்த்துக்கொண்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழிற்சாலையின் உரிமையாளருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அட்மிரால்டி ஃபூட் எக்ஸ்சேஞ்சில் அமைந்துள்ள டொல்ஃபோர்ட் ஃபூட் மானுஃபெக்ச்சரிங் நிறுவனம், உணவு தயாரிக்கும் இடத்தைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதற்காக உணவு விற்பனை சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியது.

இவ்வாண்டு ஜூலை 26ஆம் தேதி, சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரி, நிறுவனத்தின் இயக்குநர் குமாரி ஜாங் சுவேமின்னின் முன்னிலையில், உணவு தயாரிப்பு இடத்தில் வழக்கமான சோதனை நடத்தினார். அப்போது, நிறுவனத்தின் பொட்டலமடிப்பு அறையில் ஏகப்பட்ட கரப்பான்பூச்சிகள் மொய்ப்பதை அவர் கண்டார். அதோடு, தரையில் சிதைவுகள் இருப்பதையும், சுவரில் பதிக்கப்பட்ட கற்கள் அழுக்காக இருப்பதையும் அவர் கவனித்தார்.

சோயா விதைகளைப் பதனிடும் இயந்திரங்களில் சிலந்திகளும் அவற்றின் வலைகளும் காணப்பட்டன. இந்நிறுவனம் ஏற்கனவே சில முறை தவறு செய்திருப்பதால் $3,000 அபராதம் விதிக்கும்படி உணவு அமைப்பின் வழக்கறிஞர் லியாவ் சின் சொக் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினார்.

டொல்ஃபோர்ட் நிறுவனம் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், பாரம்பரிய சீன சுவையில் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதாகவும் நிறுவனத்தின் இணையத்தளம் தகவலளிக்கிறது. தவ்வு, சைவ வாத்து போன்ற பொருட்களை நிறுவனம் தயாரிக்கிறது.

டுங்லொக், பிரைம் பேரங்காடி, ஷெங் சியோங், ஜாயன்ட், என்டியுசி ஃபேர்பிரைஸ் ஆகியவற்றைத் தனது பங்காளிகளென இணையத்தளம் பட்டியலிட்டுள்ளது. நிறுவனத்தில் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே, அங்கிருந்த எல்லா உணவுப் பொருட்களும் வீசப்பட்டதாக உணவு அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அதோடு, நிறுவனத்தின் உரிமம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 7 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நிறுவனத்தின் உணவு தயாரிப்பு இடம் சுத்தம் செய்யப்பட்ட பிறகு ரத்து நீக்கப்பட்டது.

இதே கட்டடத்தில் அமைந்துள்ள உணவு விநியோக நிறுவனத்திற்கு இம்மாதத் துவக்கத்தில் $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சமையலறையில் கரப்பான்பூச்சிகளும் ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்ததாக உணவு அமைப்பு கண்டறிந்தது.