காலி டின்கள், போத்தல்களுக்கு கழிவுப் பற்றுச்சீட்டு

காலி டின்கள், போத்தல்களுக்கு கழிவுப் பற்றுச்சீட்டு

3 mins read
62c633ff-b0b8-400a-abaf-52704f84fecc
-

இனிமேல் காலியான குளிர்பான டின்களையும் பிளாஸ்டிக் போத்தில்களையும் சேகரிக்கும் தானியங்கி இயந்திரங்களில் போட்டுவிட்டு விலைக்கழிவுப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். குளிர்பான தானியங்கி இயந்திரங்கள் போலிருக்கும் இவை, காசுக்குப் பதிலாக காலி டின்களையும் போத்தல்களையும் எடுத்துக்கொள்ளும். குளிர்பானங்களுக்குப் பதிலாக விலைக்கழிவுப் பற்றுச்சீட்டுகளைத் தரும்.

மொத்தம் நான்கு காலி டின்கள், போத்தல்களுக்கு 20 காசு கழிவு பற்றுச் சீட்டைப் பெறலாம். இதனை ஃபேர்பிரைஸ் கடைகளில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம். அங் மோ கியோ ஹப், நெக்ஸ், ஜூரோங் பாயின்ட், பயா லேபர் குவாட்டர் உட்பட சிங்கப்பூரின் பல்வேறு கடைத்தொகுதிகளில் 10 இடங்களில் இன்று முதல் இந்த இயந்திரம் செயல்படுகிறது. இதில் பெரும்பாலானவை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குள் அமைந்துள்ளன. 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் இன்று இயந்திரத்தை அறிமுகப்படுத்திப் பேசிய சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்ஃலி கழிவுகளைச் சமாளிக்கும் முயற்சியில் இந்த இயந்திரம் உதவும் என்றார்.

உணவுக் கழிவு, மின்னியல் கழிவுகளுடன், பொருட்களை அடைக்க அல்லது பொட்டலம் கட்ட பயன்படும் கழிவுகளும் கழிவுப் பிரச்சினையில் முக்கிய சவாலாக உள்ளது. சிங்கப்பூரின் 'கழிவற்ற நாடு' இலக்கை எட்டுவதற்கு, நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை இணைந்து உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் அரசாங்கம், மக்கள், வர்த்தகங்களுடன் வலுவான பங்காளித்துவத்தில் இணைய வேண்டும் என்றார்.அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. எதிர்கால கழிவுகளற்ற முயற்சிக்கு இதுபோன்ற தொழிற்துறை பங்காளித்துவத்தை அதிகமாக எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் சொன்னார்.

மறுசுழற்சியை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'ரீசைக்கிள் அண்ட் சேவ்' என்ற இந்தத் திட்டத்தை தேசிய சுற்றுப்புற வாரியம் பான தயாரிப்பு நிறுவனமான 'எஃப் அண்ட் என்' உடன் இணைந்து தொடங்கியுள்ளது. இதற்கு என்டியுசி ஃபேர்பிரைஸ் ஆதரவளிக்கிறது. இத்தகைய மொத்தம் 50 இயந்திரங்களை நாடெங்கும் அமைக்கும் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.

மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரிக்க பல்வேறு முறைகளைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியின் ஓர் அங்கமாக இத்திட்டம் இடம்பெறுவதாக, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைமை நிர்வாகி டான் மெங் டுய் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் பொட்டலக் கழிவுகளுக்கு உற்பத்தியாளர்களே பொறுப்பேற்க வகைசெய்வதை நோக்கி, இத்திட்டம் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் அவற்றின் பொட்டலக் கழிவுகளைச் சேகரிப்பது முதல் அவற்றை மறுசுழற்சி செய்வது வரையிலான செலவுகளுக்குப் பொருட்களின் உற்பத்தியாளர்களே பொறுப்பேற்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கம். இந்தப் புதிய தானியங்கி இயந்திரகள் 2 லிட்டர் கொள்ளளவு உள்ள போத்தில்கள் வரை ஏற்றுக்கொள்ளும். இடவசதிக்காக, போத்தல்களும் டின்களும் தட்டையாக்கப்பட்டு அதனுள் சேமிக்கப்படும்.

மறுசீரமைக்கப்பட்ட புதிய இயந்திரம் 600 அலுமினிய கேன்களையும் பிளாஸ்டிக் போத்தல்களையும் சேமிக்கக்கூடிய வசதியைப் பெற்றிருக்கும். இயந்திரம் 80 முதல் 90 விழுக்காடு வரை நிறைந்ததும், தலைமையகத்துக்கு அது சமிஞ்சை அனுப்பும். பிறகு, நசுக்கப்பட்ட போத்தல்களும் டின்களும் சேகரிக்கப்படும். இந்த விவேக இயந்திரங்கள் அலுமினிய டின்கள், பிளாஸ்டிக் போத்தல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். கண்ணாடி போத்தல்களை ஏற்காது. முழுமையாக காலி செய்யப்படாத டின், போத்தலையும் இயந்திரம் ஏற்காது. இந்த தானியங்கி இயந்திரம் இருக்கும் இடங்களை http://www.recyclensave.sg/locations/ என்ற இணையத் தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்