கள்ளத்தனமாக சிகரெட்டுகளைக் கடத்தி வரிஏய்ப்பில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக சிங்கப்பூரர்கள் நால்வருக்கு மொத்தம் $110 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கமாருதீன் அப்துல் லத்தீஃப், 51, முகம்மது கைர் ஜோனித், 51, நூர் ஹஸ்லான் செலாமட், 51, ரஹ்மத் முகம்மது யாசின், 38, ஆகிய அந்த நான்கு ஆடவர்களும் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அவர்களுக்கு 33 முதல் 45 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கமாருதீனுக்கு $8 மில்லியனும் மற்ற மூவருக்கும் ஆளுக்கு $34 மில்லியனும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு குற்றத்திற்காக தண்டனைக் குறைப்பு பெற்றபோதும் அதை மீறியதற்காக கமாருதீனுக்கு மேலும் 105 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தாவிடில் மேலும் 21 - 28 மாதங்களை அவர்கள் சிறையில் கழிக்க நேரிடும்.
தீர்வை மற்றும் பொருள் சேவை வரியாக அவர்கள் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேல் வரிஏய்ப்பு செய்துள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது. மறுபடியும் குற்றம் புரிந்ததால் சுங்கத்துறைச் சட்டத்தின்கீழ் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, பூன் லேக்கு அருகே சன்வியூ சாலையில் உள்ள ஒரு தொழிலகக் கட்டடத்தில் 20 அடி கொள்கலன் ஒன்றில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் 10,800 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பதுக்கி வைக்க பண்டகக் கிடங்கு ஒன்றைப் பார்க்கும்படி நூர் ஹஸ்லானிடம் ரஹ்மத் கேட்டுக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கிடங்கை வாடகைக்கு எடுக்கும் பணியில் முகம்மது கைரை அமர்த்தினார் நூர் ஹஸ்லான். இதற்குக் கைம்மாறாக, தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அங்கு கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு முறையும் ஹஸ்லானுக்கும் கைருக்கும் ஆளுக்கு 2,500 வெள்ளியை ரஹ்மத் கொடுத்துள்ளார்.
2018 மார்ச்சில் ரஹ்மத்திடம் இருந்து கமாருதீன் தீர்வை செலுத்தப்படாத 2,500 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
அந்த சிகரெட்டுகளுக்குத் தீர்வையாக $1.12 மில்லியனும் பொருள் சேவை வரியாக 81,140 வெள்ளியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தீர்வை செலுத்தப்படாத பொருட்களை வாங்குவதும் விற்பதும் எடுத்துச் செல்வதும் விநியோகிப்பதும் வைத்திருப்பதும் அல்லது அவை தொடர்பாக எந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் குற்றம் என சுங்கத்துறை எச்சரித்துள்ளது.

